பக்கம் எண் :

170திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



உடைந்து போனவ ரனைவரு மோரிடத் திருள்போல்
அடைந்து நாமுன்பு விடுத்தமால் யானைபோ லின்று
தொடர்ந்த பாம்பையுந் தொலைத்தனர் மேலினிச் சூழ்ச்சி
மிடைந்து செய்வதை யாதென வினையமொன் றோர்வார்.

     (இ - ள்.) உடைந்து போனவர் அனைவரும் - (அங்ஙனம்) இரிந்து
ஓடினவராகிய அச்சமணரனைவரும், ஓர் இடத்து இருள்போல் அடைந்து -
ஓரிடத்தில் இருள் செறிந்தது போலச் செறிந்து, நாம் முன்பு விடுத்த மால்
யானை போல் - நாம் முன் விடுத்த பெரிய யானையைக் கொன்றது போல,
இன்று தொடர்ந்த பாம்பையும் தொலைத்தனர் - இன்று சென்ற பாம்பினையும்
அழித்தார்கள்; இனிமேல் மிடைந்து யாது சூழ்ச்சி செய்வது என - இனி நாம்
நெருங்கி யாது சூழ்ச்சி செய்வது என்று, வினையம் ஒன்று ஓர்வார் - ஒரு
வஞ்சத்தை எண்ணுவாராயினர்.

     செய்வது, ஐ : சாரியை. வினையம் - வஞ்சம். யாதென கருதினவர்
பின் ஓர்வாராயின ரென்க. (3)

ஆவை யூறுசெய் யார்பழி யஞ்சுவா ரதனை
ஏவு வாமிது வேபுணர்ப் பென்றுசூழ்ந் திசைந்து
பாவ காரிகள் பண்டுபோற் பழித்தழல் வளர்த்தார்
தாவி லாவுரு வாகியோர் தானவன் முளைத்தான்.

     (இ - ள்.) ஆவை ஊறு செய்யார் - பசுவிற்கு துன்பஞ் செய்யார்கள்,
பழி அஞ்சுவார் - (அதற்குத் துன்பஞ் செய்தலால் வரும்) பழியை
அஞ்சுவார்கள் (ஆகலின்), அதனை ஏவுவாம் - அப்பசுவை விடுப்போம்,
இதுவே புணர்ப்பு என்று சூழ்ந்து இசைந்து - இதுவே தக்க சூழ்ச்சியென்று
கருதி யாவருங் கருதொத்து, பாவகாரிகள் - பாவகாரிகளாகிய அச்சமணர்,
பண்டு போல் பழித்தழல் வளர்த்தார் - முன் போலவே கொடிய வேள்வி
ஒன்றினைச் செய்தனர்; தாவு இல் ஆ உரு ஆகி ஓர் தானவன் முளைத்தான் -
கெடுதலில்லாத பசுவின் வடிவாகி ஓர் அவுணன் தோன்றினான்.

     புணர்ப்பு - சூழ்ச்சி. பாவகாரிகள் - பாவமே செய்வோர்;

"பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே"

என்பது தேவாரம். ஆவின் சாதியியற்கை பற்றித் 'தாவில் ஆ' என்றார்;

"விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாட் டொட்டுஞ் சிறந்ததன் றீம்பால்
அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்
இதனொடு வந்த செற்ற மென்னை"

என்று மணிமேகலை கூறுதல் சிந்திக்கற் பாலது. (4)