வணங்கி, நிருத்தனை
விடை கொண்டு, ஏகி - சோமசுந்தரக் கடவுளிடத்து
விடைபெற்றுச் சென்று.
அயோத்தி
- யுத்தத்தில் வெல்லப்படாதது என்னும் பொருளது,
பதினோராயிரம் ஆண்டு இராமன் அரசு புரிந்தனன் என்பர். மேனாள் -
ஆண்டிருந்த பின்பு - ஈண்டு, காலங்குறித்தது. அசரீரி - சரீரம் இல்லது;
வானில் எழும் உரை. (35)
மறைப்பொரு
ளுரைத்தோன் சொன்ன வண்ணமேயிலங்கை யெய்தி
அறத்தினைத் தின்ற பாவி யாவிதின் றனையான் செல்வத்
திறத்தினை யிளவற் கீந்து திருவிரா மேசங் கண்டு
கறைப்படு மிடற்றி னானை யருச்சித்துக் கருணை வாங்கி. |
(இ
- ள்.) மறைப்பொருள் உரைத்தோன் சொன்ன வண்ணமே -
வேதத்துக்குப் பொருளருளிச் செய்த சோமசுந்தரக்கடவுள் கூறியருளியபடியே,
இலங்கை எய்தி - இலங்கையை அடைந்து, அறத்தினைத் தின்றபாவி ஆவி
தின்று - அறத்தை அழித்த பாவியாகிய இராவணனது ஆவியைப் பருகி,
அனையான் செல்வத்திறத்தினை இளவற்கு ஈந்து - அவனுடைய
செல்வக்கூறுகளை அவன் தம்பியாகிய விபீடணனுக்குக் கொடுத்து, திரு
இராமேசம் கண்டு - திருவிராமேச்சுரத்தை ஆக்கி, கறைப்படும் மிடற்றினானை அருச்சித்து
- நஞ்சக்கறை பொருந்திய திருமிடற்றையுடைய சிவபெருமானை
வழிபட்டு, கருணை வாங்கி - அவனருளைப் பெற்று.
அறத்தை
அடியொடுங் கெடுத்தவன் என்பார் 'அறத்தினைத் தின்ற
பாவி' என்றார். 'அறத்தினைத் தின்றபாவி யாவிதின்று' என்பது மிக்க
நயமுடைத்து. தின்னாவதற்றைத் தின்பனவாகக் கூறுதல்.
"வாரா மரபின
வரக்கூ றுதலும்" |
என்னும் தொல்காப்பியச்
சூத்திரத்து 'அன்னவை யெல்லாம்' என்பதனால்
முடியும். காணல் - உண்டாக்கல். (36)
பற்றிய பழியி னீந்தி யிந்திரன் பழியைத் தீர்த்த
வெற்றிகொள் விடையி னானை மீளவும் வந்து போற்றி
அற்றிர ளனைய கோதைக் கற்பினுக் கரசி யோடுஞ்
சுற்றிய சடையி ராமன் றொன்னக ரடைந்தா னிப்பால். |
(இ
- ள்.) பற்றிய பழியின் நீந்தி - தன்னைப் பற்றித் தொடர்ந்த
கொலைப் பாவத்தினின்றும் நீங்கி, இந்திரன் பழியைத் தீர்த்த வெற்றி கொள்
விடையினானை - தேவேந்திரனது பழியினைப் போக்கிய வெற்றி பொருந்திய
இடபவூர்தியையுடைய சோமசுந்தரக் கடவுளை, மீளவும் வந்து போற்றி -
மீண்டும் வந்து துதித்து, அல்திரள் அனைய கோதைக் கற்பினுக்கு
அரசியோடும் - இருளின் திரட்சியை ஒத்த கூந்தலையுடைய
கற்புக்கிறைவியாகிய சானகியோடும், சுற்றிய சடை இராமன் - சுற்றிக் கட்டிய
சடையினையுடைய இராமன், தொல்நகர் அடைந்தான் - தொன்மையுடைய
தனது அயோத்தி நகரத்தை அடைந்தான்; இப்பால் - பின்பு.
|