பக்கம் எண் :

மாயப்பசுவை வதைத்த படலம்185



     முனி மரபில் வந்து வேதம் வல்லனாய்ச் சிவ வழிபாட்டினை
மேற்கொண்ட இராவணனைக் கொன்றமையின் இராமனைக் கொலபை்பழி
பற்றியதென்க. இராமேச்சுரம் இராவணனைக் கொன்ற பழிதீர இராமன்
பூசித்த தென்பதனைத் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல
திருப்பாட்டுக்களிற் கூறியுள்ளார்கள்; அவற்றுள் முறையே ஒவ்வொன்று
பின்வருவன :

"தேவியை வல்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்று வித்தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல் செய்தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கடம் மேல்வினை வீடுமே"
 
"கோடிமா தவங்கள்செய்து குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தா லெறிந்துபின் னன்புகொண்டு
தேடிமால் செய்தகோயி றிருவிரா மேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே."

சீதையின் கற்பு மாண்பினைக் கம்பராமாயணம், திருவடி தொழுத படலத்தில்.
அனுமான் இராமனுக்குக் கூறுங் கூற்றுக்களால் உணரலாகும். ( )

[கலிநிலைத்துறை]
செங்கோ லனந்த குணமீனவன் றேயங் காப்பக்
கொங்கோ டவிழ்தார்க் குலபூடணன் றன்னை யீன்று
பொங்கோத ஞாலப் பொறைமற்றவன் பாலி றக்கி
எங்கோ னருளாற் சிவமாநக ரேறி னானே.

     (இ - ள்.) செங்கோல் அனந்தகுண மீனவன் - செங்கோலையுடைய
அனந்தகுண பாண்டியன், தேயம் காப்ப - நிலவுலகைப் பாதுகாப்பதற்கு,
கொங்கோடு அவிழ்தார்க் குலபூடணன் தன்னை ஈன்று - மகரந்தத்தோடு
மலர்ந்த மலர் மாலையையுடைய குலபூடணனைப் பெற்று, பொங்கு ஓதம்
ஞாலப் பொறை - பொங்குகின்ற கடல் சூழ்ந்த நிலச் சுமையை, அவன்பால்
இறக்கி - அக்குலபூடணனிடத்தில் இறக்கி, எங்கோன் அருளால் சிவமாநகர்
ஏறினான் - எம்பெருமானாகிய சோம சுந்தரக்கடவுளின் திருவருளால்
பெருமை பொருந்திய சிவபுரத்தை அடைந்தான்.

     ஓதம் - கடல்;

"ஓதமலி நஞ்சுண்ட வுடையானே"

எனத் திருவாசகம் கூறுவது காண்க. மற்று : அசை. பொறையை இறக்கிச்
சிவமாநகர் ஏறினான் என நயந்தோன்றக் கூறினார். (38)

                     ஆகச்செய்யுள் - 1663.