அங்கிருந் தநாதி மூர்த்தி யாதிநான் மறைக ளேத்துங்
கொங்கிருங் கமலச் செவ்விக் குரைகழல் வணங்கிக் கேட்பப்
பங்கிருந் தவட்கு வேதப் பயனெலாந் திரட்டி முந்நீர்ப்
பொங்கிருஞ் சுதைபோ லட்டிப் புகட்டினான் செவிக ளார. |
(இ
- ள்.) அநாதி மூர்த்தி அங்கு இருந்து - அநாதி மூர்த்தியாகிய
இறைவன் அத்தலத்தில் அமைந்தருளி. ஆதி நான் மறைகள் ஏத்தும் -
பழைய நான்கு மறைகளும் துதிக்கும், கொங்கு இரும் கமலச்செவ்வி - மண
மிக்க பெரியதாமரை மலர்போலுஞ் செவ்வி வாய்ந்த, குரைகழல்
வணங்கிக்கேட்ப - ஒலிக்கும் வீரக்கழலணிந்த தன் திருவடிகளை
வணங்கிக்கேட்ப, பங்கு இருந்தவட்கு - ஒருபாகத்தில் வீற்றிருந்த
அம்மையார்க்கு, வேதப்பயன் எலாம் திரட்டி - மறைப்பொருள்
அனைத்தையும் ஒரு சேரத் திரட்டி, முந்நீர்ப்பொங்கு இருஞ்சுதைபோல்
அட்டி - கடலிற் றோன்றிய பெருமையமைந்த அமிழ்தைப்போற் சொரிந்து,
செவிகள் ஆர புகட்டினான் - செவிகள் நிரம்புமாறு புகட்டியருளினான்.
அட்டி
- சொரிந்து; "பூக்கையாலட்டி" எனத்தேவாரத்துள் வருதலுங்
காண்க. (63)
வேறு
|
அவ்வேலை
யன்புடையா ரறுபதினா யிரவருக்கு மளித்துப் பாச
வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி
மைவேலை யனை யவிழி யங்கயற்க ணங்கையொடு மதுரை சார்ந்தான்
இவ்வேலை நிலம்புரக்க முடிகவித்துப் பாண்டியனென் றிருந்த மூர்த்தி. |
(இ
- ள்.) இவ்வேலை நிலம்புரக்க - கடல் சூழ்ந்த இந்நிலவுலகைப்
புரந்தருள, முடிகவித்துப் பாண்டியன் என்று இருந்த மூர்த்தி - முடிசூடிச்
சுந்தர பாண்டியனாக இருந்தருளிய இறைவன், அவ்வேலை - அப்பொழுது,
அன்புஉடையார் அறுபதினாயிரவருக்கும் அளித்து - மெய்யன்புடைய
அறுபதினாயிரம் அடியார்களுக்கும் அப்பொருளை அறிவுறுத்தி, பாச
வெவ்வேலை கடப்பித்து - ஆணவமலமாகிய கொடிய கடலைக் கடக்கச்
செய்து, வீடாத பரானந்த வீடுநல்கி - அழியாத பேரின்ப வீட்டினை அருளி,
மைவேலை அனையவிழி அங்கயற்கண் நங்கையொடும் மதுரைசார்ந்தான் -
மைதீட்டிய வேலை ஒத்த விழிகளையுடைய அங்கயற்கண்ணம் மையாரோடும்
மதுரையை அடைந்தருளினான்.
அறுபதினாயிரர்
- திருவுத்தர கோசமங்கையில் இருந்த
சிவனடியார்களும் சிவயோகிகளும். வீடாத - அழியாத. பரானந்தம் -
மேலாகிய ஆனந்தம், சிவானந்தம். (64)
ஆகச்செய்யுள்
- (2712)
|