தனக்குயிர்த் துணையா நின்ற சாமந்தன் றன்னை நோக்கி
உனக்கெளி வந்தார் கூட லுடையநா யகரே யென்றால்
எனக்கவ ராவார் நீயே யென்றவற் கியாவு நல்கி
மனக்கவல் பின்றி வாழ்ந்தான் மதிவழி வந்த மைந்தன். |
(இ
- ள்.) தனக்கு உயிர்த்துணையா நின்ற சாமந்தன் தன்னை நோக்கி
- தனக்கு உயிர்த்துணையாகப் பொருந்தி நின்ற சுந்தரசாமந்தனைப் பார்த்து,
கூடல் உடைய நாயகரே - மதுரையில் வீற்றிற்கும் எல்லாமுடைய
சோமசுந்தரக்கடவுளே, உனக்கு எளிவந்தார் என்றால் - நினக்கு எளிதில்
வந்தருளினாரென்றால், எனக்கு அவராவார் நீயே என்று - எனக்கு
அக்கடவுள் நீயே என்று, அவற்கு யாவும் நல்கி - அவனுக்குப் பல
சிறப்புக்களையுங் கொடுத்து, மதிவழி வந்த மைந்தன் - சந்திரன் மரவில்
வந்த குலபூடண பாண்டியன், மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் - மனத்திற்
கவலைஎன்பதில்லாமல் வாழ்ந்துவருவானாயினன்.
நாயகரே
என்பதில் ஏகாரம் சிறப்புணர்த்திற்று. ஆவார் : முதல்
வேற்றுமைச்சொல். சிவனடியாரைச் சிவனெனவே தேறி வழிபடுதல்
முறையாகலின் அவர் நீயே என்றான். (41)
ஆகச்செய்யுள்
- 1704.
|