பக்கம் எண் :

உலவாக்கிழியருளிய படலம்215



முப்பத்திரண்டாவது வளையல் விற்ற படலம்

[அறுசிருடியாசிரிய விருத்தம்]
வேதந் தனது வடிவென்று விண்ணின் றிழிந்த நிமானமறைக்
கீதன் செழியன் றனக்குலவாக் கிழிதந் தளித்த வழியிதுவப்
போதங் கடந்த பொருள்வணிகப் புத்தேண் மாட மணிமறுகு
பாதந் தடவ நடந்துவளை பகர்ந்த பரிசு பகர்கிற்பாம்.

     (இ - ள்.) வேதம் தனது வடிவு என்று - மறையே தனது திரு வுருவம்
என்று கூறியருளி, விண் நின்று இழிந்த விமானம் மறைக்கீதன் -
வானினின்றும் இறஙகிய விமானத்தின்கண் வீற்றிருக்கும் வேதகீதனாகிய
சோமசுந்தரக்கடவுள், செழியன் தனக்கு உலவாக்கிழி தந்தளித்த வழி இது -
பாண்டியனுக்கு உலவாக்கிழி தந்தருளிய திருவிளையாடல் இதுவாகும்; அப்
போதம் கடந்த பொருள் - (இனி) சுட்டறிவினைக் கடந்த அவ்விறைவன்,
புத்தேள் வணிகன் - தெய்வத்தன்மையையுடைய வணிகனாய், மாடம் மணி
மறுகு பாதம் தடவ நடந்து - மாடங்கள் நிறைந்த அழகிய வீரியிலே
திருவடிகள் தோற நடந்தருளி, வளை பகர்ந்த பரிசு பகர்கிற்பாம் - வளையல்
விற்ற திருவிளையாடலைக் கூறுவாம்.

     ‘வேதந் தனது வடிவென்று’ என்றது மேற்படலத்தில் ‘மறையே நமது
வடிவாகும்’ என்றதைச் சுட்டிற்று; வேதமே தனது வடிவமென்று இழிந்த என
விமானத்திற்கு அடையாக்கி யுரைத்தலுமாம். வணிகரது தெய்வத்
தன்மையுடைய மறுகில் என்றுரைத்தலும் பொருந்தும். போதங் கடந்த பொருள் பாதந் தடவ நடந்து என அருமையும எளிமையும் தோன்றக் கூறினார். (1)

இறைவன் குலபூ டணன்றிகிரி யிவ்வா றுருட்டு நாண்முன்னாட்
சிறைவண் டறையுந் தாருவன தெய்வ முனிவர் பன்னியர்தந்
நிறையன் றளந்து* காட்டுகென நெடியோன் மகனைப்                                     பொடியாக்கும்
அறவன் றானோர் காபாலி யாகிப் பலிக்கு வருகின்றான்.

     (இ - ள்.) இறைவன் குலபூடணன் திகிரி இவ்வாறு உருட்டுநாள் -
மன்னனாகிய குலபூடணன் தனது ஆணையாகிய திகிரியை இங்ஙனம்
செலுத்தும்பொழுது, முன்னாள் - முன்னொரு காலத்தில், சிறைவண்டு
அறையும் தாருவன தெய்வமுனிவர் பன்னியர்தம் - சிறைகளையுடைய
வண்டுகள் ஒலிக்கும் தாருகவனத்துத் தெய்வத்தன்மை பொருந்திய


     (பா - ம்.) * நிறைவன்றளந்து.