பக்கம் எண் :

216திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



முனிபத்தினிகளின், நிறை - கற்பினை, அளந்து காட்டுகு என - அளந்து
காட்டுவேனென்று, நெடியோன் மகனைப் பொடி ஆக்கும் அறவன் -
திருமாலின் புதல்வனாகிய மதவேளைப் பொடியாக்கிய அறவடிவினனாகிய
இறைவன், அன்று தான் ஓர் காபாலி ஆகிப் பலிக்கு வருகின்றான் -
அப்பொழுது தான் ஒரு தலைகோட்டை ஏந்தினவனாய்ப் பலிக்கு
வருவானாயினான்.

     இவ்வாறுருட்டுநாள் என்றது பின்சென்று இயையும். தாருகவனம்
என்பது விகாரமாயிற்று. பன்னி - பத்தினி. காட்டுகு - காட்டுவேன்; கு :
தன்மை யொருமை முற்றுவிகுதி. மறவன் எனப் பிரித்து, வீரத்தை
யுடையான என்றுரைத்தலுமாம். காபாலி - கபாலத்தையுடையவன்;
தத்திதாந்தம். தம் : சாரியை. தான் : அசை. (2)

வேத மசைக்குங் கோவணமு மெய்யி னீறு முள்ளாள்க்
கீத மிசைக்குங் கனிவாயு முள்ளே நகையுங் கிண்கிணிசூழ்
பாத மலரும் பாதுகையும் பலிகொள் கலனுங் கொண்டிரதி
மாதர் கணவன்* றவவேட மெடுத்தா லொத்து வருமெல்லை.

     (இ - ள்.) அசைக்கும் வேத கோவணமும் - கட்டிய வேதமாகிய
கோவணமும், மெய்யில் நீறும் - திருமேனியிலே திருநீறுங்ம, உள்ளாளக்
கீதம் இசைக்கும் கனிவாயும் - உள்ளாளமாகிய கீதத்தினைப் பாடும் கொவ்
வைக்கனிபோன்ற வாயும், உள்ளே நகையும் - உள்ளே அரும்பிய புன்
முறுவலும், கிண்கிணிசூழ் பாதமலரும் - கிண்கிணி சூழ்ந்த திவடித்
தாமரையும், பாதுகையும் - திருவடியிற் றரித்த பாதுகையும், பலி கொள்
கலனும் கொண்டு - பலியேற்கும் கலனுமாகிய இவற்றைக் கொண்டு, இரதி
மாதர் கணவன் தவவேடம் எடுத்தால் ஒத்து வரும் எல்லை - அழகிய
இரதியின் நாயகனாகிய மதவேள் தவவேடம் எடுத்து வந்தாற்போன்று வரும்
பொழுது.

     உள்ளாளம் - காற்றினை உள்வாங்கிப் பாடும் பாட்டு; இது
பதினொருவகைப்படும்;

"உள்ளாளம் விந்துவுட னாத மொலியுருட்டுத்
தள்ளாத தூக்கெடுத்த றான்படுத்தல் - மெள்ளக்
கருதி நலிதல்கம் பித்தல் குடிலம்
ஒருபதின்மே லொன்றென் றுரை"
 
"கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா
பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலவை
கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர்
உள்ளாளப் பாட லுணர்"

என்னும் இசை மரபுச் செய்யுட்களால் உள்ளாளத்தின் வகையும் இயல்பும்
உணர்க. கொண்டு - உடையவனாய். காமக் குறிப்புத் தோற்றும் பேரழகும்
தவவேடமும் உடையனாய் வருதலின் ‘இரதி மாதர் கணவன் றவவேட
மெடுத்தாலொத்து’ என்றார். (3)


     (பா - ம்.) * மாது கணவன்.