சுற்றத்தார் பாசம்போல்
வீடெய்தாமல் தடை செய்து நிற்றலின் சுற்றமாம்
பாசம் என்றார். மேல், சுற்றமுந் தொடர்பு நீத்தேம் என அடிகள் அருளிச்
செய்தமையுங் காண்க. நீவுதல் - ஒழித்தல், துகள் - காம வெகுளி
மயக்கமுமாம். போலும், ஒப்பில் போலி. இனி என்பது அம் பெற்று இன்னம்
என்றாயது. குறுமதி - சிறுமதி; பிறை. (2)
சிந்துர நுதன்மால்
யானைச் செல்வவப் பரிக்கு வேறு
மந்துரை யகன்ற வாக* வகுக்கசூழ் தண்ணீ ரூட்ட
நந்துறை தடங்கள் வேறு தொடுக+நீ ணகர மெங்கும்
இந்துறை மாட மெல்லா மழகுசெய் திடுக+ வென்றார். |
(இ
- ள்.) சிந்துர நுதல்மால் யானைச் செல்வ - சிந்துர மணிந்த
நுதலையும் மதமயக்கத்தையு முடைய யானையை யுடைய செல்வனே,
அப்பரிக்கு - அங்ஙனம் வருங் குதிரைகளுக்கு, அகன்றவாக வேறுமந்துரை
வகுக்க - அகற்சி யுள்ளனவாக வேறு குதிரைப் பந்திகள் வகுத்திடுக;
தண்ணீர் ஊட்ட - அவைகட்கு நீர் ஊட்டுதற் பொருட்டு, நந்து உறை
தடங்கள் வேறு சூழ் தொடுக - சங்குகள் உறையுந் தாடகங்கள் வேறு சூழத்
தோண்டுக; நீள் நகரம் எங்கும் - நீண்ட நகரின் எல்லா விடங்களிலுமுள்ள,
இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக - சந்திரன் தவழும்
மாளிகைகளனைத்தையும் ஒப்பனை செய்க; என்றார் - என்று கூறினார்.
சிறந்த
பரிகள் மிகுதியாக வருமென்னுங் கருத்தால் இங்ஙனம் கூறினார்.
மந்துரை - குதிரை கட்டு மிடம். தொடுதல் - தோண்டுதல். (3)
காவலன்
கருமஞ் செய்வோர் கந்துகப் பந்தி யாற்றி
ஓவற நகர மெங்கு மொளிபெற வழகு செய்யத்
தாவுதெண் கடலேழ் கண்ட சகரர்போல் வைகன் மூன்றில்
வாவியுங் குளனுந் தொட்டார் மண்டொடு கருவி மாக்கள். |
(இ
- ள்.) காவலன் கருமம் செய்வோர் - (மன்னன் ஆணைப்படி)
அவன் கருமஞ் செய்யும் ஏவலாளர், கந்துகப் பந்தி ஆற்றி - குதிரைப் பந்தி
அமைத்து, நகரம் எங்கும் ஓவு அற ஒளிபெற அழகு செய்ய -
நகரமனைத்தும் நீங்காமல் ஒளி விடுமாறு அலங்கரிக்க, மண்தொடு கருவி
மாக்கள் - மண் தோண்டுங் கருவியினையுடைய மக்கள், தாவு தெண் கடல்
ஏழ்கண்ட சகரர் போல் - அலைகள் தாவுந் தெள்ளிய ஏழு கடலையும்
சகரர்கள் தோண்டினமைபோல, வைகல் மூன்றில் - மூன்று நாட்களில்,
வாவியும் குளனும் தொட்டார் - பலவாவிகளையுங் குளங்களையுந்
தோண்டினர்.
(பா
- ம்.) * மந்துரை யகலிதாக வகுப்பது. +வேறு தொடுவது. +அழகு
செய்திடுவது.
|