பக்கம் எண் :

நரி பரியாக்கிய படலம்245



சென்று, தண்டம் செய்து - தண்டித்து, எம் பொன் எலாம் அறுவு கொண்டு
வாங்குமின் - எமது பொன் முழுதையும் அறுதியாக வாங்குங்கள், போமின்
- விரைந்து செல்லுங்கள், என்றான் - என்று கட்டளை யிட்டான்.

     எவன் என்பது என் என்று ஆகி இகழ்ச்சி குறித்து நின்றது. கொன்,
அச்சப் பொருட்டாய இடைச் சொல்;

"அச்சம் பயமிலி காலம் பெருமையென்
றப்பா னான்கே கொன்னைச் சொல்லே"

என்பது தொல்காப்பியம், மறுவு எனப் பிரித்து, மச்சம் என்றுரைத்தலுமாம். (6)

கற்றிணி தோளான் சீற்றங் கண்டெதிர் நில்லா தஞ்சிச்
சுற்றிய பாசம் போலத் தொடர்ந்துகொண் டேகி மள்ளர்
எற்றினி வகைதான் பொன்னுக் கியம்புமென் றதிர்த்துச் சீறிச்*
செற்றமில் சிந்தை யார்மேற் செறிந்தகல் லேற்றி னாரே.

     (இ - ள்.) கல்திணி தோளான் - மலைபோலுந் திண்ணிய
தோளையுடைய மன்னனது, சீற்றம் கண்டு மள்ளர் அஞ்சி - சினத்தினை
ஏவலாளர் கண்டு பயந்து, எதிர் நில்லாது - எதிரே நில்லாமல், சுற்றிய பாசம்
போலத் தொடர்ந்து கொண்டு ஏகி - விடாது பாசஞ்சூழ்ந்தாற் போலச்
சூழ்ந்து தொடர்ந்து சென்று, இனி பொன்னுக்கு வகைதான் எற்று இயம்பும்
என்று அதிர்த்துச் சீறி - இனிப்பொருள் கொடுப்பதற்கு வகையாது
கூறுமென்று கழறிச்சினந்து, செற்றம் இல் சிந்தையார் மேல் செறிந்த கல்
ஏற்றினார் - சின மிறந்தமன முடைய அடிகளின் மேல் பாரஞ்செறிந்த
கல்லை ஏற்றினார்.

     பாசம் சூழ்ந்தாற்போலச் சூழ்ந்து என்க. தான், அசை. (7)

பொன்னெடுஞ் சயிலங் கோட்டிப் புரம்பொடி படுத்த வீரர்
சொன்னெடுந் தாளை யுள்கி நின்றனர் சுமந்த பாரம்
அந்நெடுந் தகையார் தாங்கி யாற்றினா ரடைந்த வன்பர்
தந்நெடும் பார மெல்லாந் தாங்குவா ரவரே யன்றோ.

     (இ - ள்.) நெடும் பொன் சயிலம் கோட்டி - நெடிய பொன்மலையை
வில்லாக வளைத்து, புரம்பொடி படுத்தவீரர் - முப்புரங்களையும் நீறாக்கிய
வீரராகிய இறைவரது, சொல் நெடுந்தாளை உள்கி நின்றனர் - புகழமைந்த
நீண்ட திருவடியை (மணிவாசகனார்) மனத்தின்கண் நினைத்து(த்துன்பமின்றி)
நின்றனர்; சுமந்த பாரம் - அவர் சுமந்த பாரத்தினை, அந்நெடுந்தகையார்
தாங்கி ஆற்றினார் - அப் பெருந்தகையாராம் இறைவர் தாங்கிச் சுமந்தனர்;
அடைந்த அன்பர் தம் நெடும் பாரம் எல்லாம் - தம்மை அடைந்த


     (பா - ம்.) * எதிர்த்துச்சீறி.