பக்கம் எண் :

விடையிலச்சினையிட்ட படலம்247



முப்பத்து நான்காவது விடையிலச்சினையிட்ட படலம்

[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
சந்து சூழ்மல யச்சி லம்பர் தவம்பு ரிந்த வியக்கிமார்க்
கந்த நாலிரு சித்தி தந்த தறைந்த னந்தன தடிதொழா
வந்து மீள்வள வன்பொ ருட்டு வடாது வாயிறி றந்தழைத்
திந்து சேகரன் விடையி லச்சினை யிட்ட வாறுவி ளம்புவாம்.

     (இ - ள்.) சந்து சூழ்மலயச் சிலம்பர் - சந்தன மரங்கள் சூழ்ந்த
பொதியின் மலையையுடைய சோமசுந்தரக் கடவுள், தவம்புரிந்த இயக்கி
மார்க்கு - தவமியற்றிய இயக்க மாதர் அறுவர்க்கு, அந்தநா லிருசித்தி
தந்தது அறைந்தனம் - அந்த எட்டுச் சித்திகளையும் அருளிச் செய்த
திருவிளையாடலைக் கூறினாம்; வந்த தனது அடி தொழா மீள் வளவன்
பொருட்டு - வந்து தன் திருவடிகளை வணங்கித் திரும்பும் சோழமன்னன்
பொருட்டு, வடாது வாயில் திறந்து அழைத்து - வடக்கு வாயலைத் திறந்து
உள்ளே அழைத்து, இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு
விளம்புவாம் - பிறை முடியனாகிய இறைவன் இடபக் குறியினைப் பொறித்த
திருவிளையாடலை (இனிக்) கூறுவாம்.

     எண் சித்திகளும் முன் கூறினமையால் ‘அந்த’ எனச் சுட்டினார்.
வளவன் பொருட்டு அங்ஙந் தொழுதற்குத் திறந்தழைத்து இலச்சினை
யிட்டவாறு என்க.

     வடாது - வடக்கிலுள்ளது. (1)

தோடு வெட்டி மலைத்து வாள்விதிர் துணைவி ழிக்குயி
                                      லிளமுலைக்
கோடு வெட்டிய குறிகொண் மேனியர் குடிகொண் மாநகர்
                                    கடிகொள்பைங்
காடு வெட்டிய கார ணக்குறி காடு வெட்டிய சோழனென்
றேடு வெட்டிய வண்டு சூழ்பொழி லெயல்கொள்கச்சியு ளானவன்.

     (இ - ள்.) தோடு மலைத்து வெட்டி - (காதின்) தோட்டினைப்
போர்புரிந்து வெட்டி, வாள் விதிர் துணைவிழிக் குயில் - வாளை அசைத்தா
லொத்த இரண்டு விழிகளையுடைய குயில்போலும் உமைப் பிராட்டியின்,
இளமுலைக்கோடு வெட்டிய குறிகொள் மேனியர் - இளமையாகிய கொங்கை
யென்னுங் கொம்பினாற் போழப்பட்ட குறியினைக்கொண்ட திருமேனியை
யுடைய ஏகம்பவாணர், குடிகொள் மாநகர் - எழுந்தருளி யிருக்கும் பெருமை