பக்கம் எண் :

250திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



போலுஞ் சிவந்த கரங்களைக் குவித்து, நயன பங்கயம் நீர் சோர -
கண்ணாகிய தாமரையினின்றும் ஆனந்த வருவி ஒழுக, நாதனைப்
பாடலுற்றார் - இறைவனைப் பாடத் தொடங்கினார்.

     சுந்தரனாகிய கருணை வெள்ளம் உயர்திணைப் பெயர் ஈறு கெட்டு
வலி மிக்கது. (17)

          [கொச்சகக்கலிப்பா]
எந்தா யனைத்துலகு மீன்றாயெத் தேவர்க்குந்
தந்தாய் செழுங்குவளைத் தாராய் பெருந்துறையில்
வந்தாய் மதுரைத் திருவால வாயுறையுஞ்
சிந்தா மணியே சிறியேற் கிரங்காயோ.

     (இ - ள்.) எந்தாய் - எமது தந்தையே, அனைத்து உலகும் ஈன்றாய் -
உலக மனைத்தையும் பெற்றவனே, எத்தேவர்க்கும் தந்தாய் - எல்லாத்
தேவர்கட்கும் தந்தையே, செழுங்குவளைத்தாராய் - செழிய
குவளைமலர்மாலையை அணிந்தவனே, பெருந்துறையில் வந்தாய் -
அங்ஙனம் அணிந்து அடியேனை ஆட்கொள்ளுதற் பொருட்டுத்
திருப்பெருந்துறையின்கண் வந்தருளியவனே, மதுரைத் திருவாலவாய்
உறையும் சிந்தாமணியே - மதுரை என்னுந் திருவாலவாயின்கண் வீற்றிருக்கும்
சிந்தாமணி போல்வானே, சிறியேற்கு இரங்காயோ - சிறியேனாகிய எனக்கு
இரங்கியருளாயோ.

     தந்தாய், விளியின் ஐ ஆயாகத்திரிந்தது. குவளை கழுநீரெனவும்
படும்.

"காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக வெழில்பெற வணிந்தும்"

என்பது திருவாசகம். திருவாலவாய் - இறைவன் கோயிலுமாம். சிந்தாமணி
- சிந்தித்த வற்றைத் தரும்மணி; சிந்தாத மணி என்றுமாம்;

"ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்க மாடாமோ"

என்னும் திருவாசகமுங் காண்க. (18)

மூவா முதலாய் முதுமறையா யம்மறையுந்
தாவாத சோதித் தனிஞான பூரணமாய்த்
தேவாதி தேவாய்த் திருவால வாயுறையும்
ஆவார் கொடியா யடியேற் கிரங்காயோ.

     (இ - ள்.) மூவா முதலாய் - கெடாத முதலாகியும், முது மறையாய் -
பழைய வேதமாகியும், அம்மறையும் தாவாத சோதித் தனிஞான பூரணமாய் -
அவ்வேதமும் பற்றாத ஒளியுருவாகிய ஒப்பற்ற ஞான நிறைவாகியும், தேவாதி