பக்கம் எண் :

நரி பரியாக்கிய படலம்257



யுடையார் பலர்; வாள் நிலாமுத்தம் மொய்ச்ச வெண்குடையார் பலர் -
வெள்ளிய ஒளியினையுடைய முத்துக்கள் நெருங்கிய வெண்குடையினை
யுடையார் பலர்; மொய்ம்பினர் இவருள் - வலியினையுடையராய இவர்
நடுவே.

     தைச்ச, வைச்ச, மொய்ச்ச என்பன போலி. (32)

தரும மாதிநாற் பொருளெனுந் தாளது ஞான
கரும காண்டமாஞ் செவியது காட்சியைக் கடந்த
ஒருமை யாம்பர மபரமா முணர்வெனுங் கண்ண
தருமை யாம்விதி முகத்தது நிடேதவா லதுவால்.

     (இ - ள்.) தருமம் ஆதி நால் பொருள் எனும் தாளது - அறமுதலிய
நான்கு பொருளாகிய நான்கு கால்களை யுடையது; ஞானகரும காண்டமாம்
செவியது - ஞானகாண்டமும் கரும காண்டமும் ஆகிய இரண்டு காதுகளை
யுடையது; காட்சியைக் கடந்த ஒருமையாம் - சுட்டறிவினைக்கடந்த
ஒருப்பாடாகிய, பரம் அபரமாம் உணர்வு எனும் கண்ணது - பரஞானமும்
அபர ஞானமுமாகிய இரண்டு கண்களை யுடையது; அருமையாம்
விதிமுகத்தது - அருமையாகிய விதியாகிய முகத்தினை யுடையது; நிடேத
வாலது - விலக்காகிய வாலை யுடையது.

     இது முதல் நான்கு செய்யுளால் இறைவன் இவர்ந்து வரும் வேதப்
புரவியை வருணிக்கின்றார். வேதமானது அறம் பொருள் இன்பம் வீடு
என்னும் நாற்பொருளால் நிலை பெறுவதும், ஞானகாண்டம் கருமகாண்டம்
என இரு பகுதிப்படுவதும். பரஞான அபர ஞானங்களை விளைவிப்பதும்,
விதி விலக்கு வடிவினதும் ஆம் என்க. (33)

தந்தி ரங்களாற் புறவணி தரித்தது விரித்த
மந்தி ரங்களாற் சதங்கைதார் மணிச்சிலம் பணிந்த
தந்த ரஞ்சுழல் சோமனு மருக்கனு மிதிக்குஞ்
சுந்த ரப்பதம் பொறைகொளத் தூங்கிரு புடைத்தால்.

     (இ - ள்.) தந்திரங்களால் புற அணி தரித்தது - ஆகமங்களால்
புறத்திலணியும் அணிகளைப் பூண்டது; விரித்த மந்திரங்களால் -
அவ்வாகமங்கள் விரித்த மந்திரங்களால், சதங்கை தார் மணிச் சிலம்பு
அணிந்தது - சதங்கை மாலையையும் கிண்கிணி மாலையையும் மணிகள்
அமைந்த சிலம்பினையும் அணிந்தது; மிதிக்கும் சுந்தரப் பதம் பொறை
கொள - மிதிக்கின்ற அழகிய திருவடிகளைத் தாங்க, அந்தரம் சுழல்
சோமனும் அருக்கனும் தூங்கு இருபுடைத்து - வானின்கண் சுழலும்
சந்திரனும் சூரியனுமாகிய அங்கவடிகள் தொங்குகின்ற
இருமருங்கினையுடையது.

     தந்திரம் - ஆகமம். வேதத்தை விளக்குவன ஆகமங்களாதலின்
‘தந்திரங்களால் புறவணி தரித்தது’ என்றார். மேற் செய்யுளில் உறுப்புகள்
கூறி, இதில் அணிகள் கூறினார். சோமனும் அருக்கனுமாகிய அங்கவடிகள்
என விரிக்க. புடைத்து - பக்கங்களை உடையது; குறிப்பு முற்று. (34)