பக்கம் எண் :

26திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



[அறுசீரடியாசிரியவிருத்தம்]
மன்னன்மு னமைச்சர் சித்தர் மறுத்துரை மாற்றங் கூற
முன்னவ னருள்பெற் றிம்மை மறுமையு முனிந்த யோகர்
இந்நில வேந்தர் மட்டோ விந்திர னயன்மா லேனோர்
தன்னையு மதிப்ப ரோவென் றிருந்தனன் றரும வேந்தன்.

     (இ - ள்.) அமைச்சர் - அமைச்சர்கள், மன்னன்முன் - பாண்டியன்
முன் சென்று, சித்தர் மறுத்து உரைமாற்றம் கூற - சித்த மூர்த்திகள் மறுத்துக்
கூறிய மொழியினைச் சொல்ல, தரும வேந்தன் - (கேட்ட) அறநெறி
பிழையாத பாண்டிவேந்தன், முன்னவன் அருள்பெற்று இம்மை மறுமையும்
முனிந்த யோகர் -முதல்வனாகிய சிவபெருமான் திருவருளைப் பெற்று
இம்மை மறுமைப் பயன்களை வெறுத்த யோகிகள், இந்நில வேந்தர் மாட்டோ
- இந்நிலவுலக மன்னரை மாத்திரமோ, இந்திரன் அயன் மால் ஏனோர்
தன்னையும் மதிப்பரோ - இந்திரனையும் அயனையும் திருமாலையும் மற்றைத்
தேவர்களையும் மதிப்பரோ (மதியார்), என்று இருந்தனன் - என்றெண்ணி
இருந்தனன்.

     உரைமாற்றம் : வினைத்தொகை. ‘இகபரத்தாசை கழிந்த யோகியர்’
என்றார் முன்னரும். தன்னையும், ஈண்டும் சாரியை பன்மையி
லொருமையாயிற்று.

"பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
பணிகேட்கக் கடவோமா பற்றற் றோமே"

எனவும்,

"சென்றுநாம் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோம்"

எனவும் திருநாவுக்கரசுகளும்,

"போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்"

எனவும்,

"கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு"

எனவும் திருவாதவூரடிகளும் கூறிய அருண்மொழிகள் ஈண்டுச் சிந்திக்கற்
பாலன.

                      ஆகச் செய்யுள் - 1356.