பக்கம் எண் :

நரி பரியாக்கிய படலம்263



சாலையினின்றும் புகை புகைந்தெழுந் தோற்றமே ஒப்பதல்லாமல், கடாது -
(மற்றொன்று) ஒவ்வாது.

     சம்பு - நரி; சிவனது பரித்திரள் என்பதும் தோன்ற நின்றது. கிண்டிய,
செய்யிய வென்னும் வினையெச்சம். கடாது - ஒவ்வாது; கடுத்தல் - ஒத்தல். (46)

மட்பு லந்திசை வான்புதை பூமியுண் மறைந்து
கொட்பு றும்பரி சதங்கைதா ரொலியினுங் குளிர்வான்
பெட்பு றுங்குர லொலியினுஞ் செவியினிற் பிறிது
கட்பு லங்களாற் கண்டிலர் வழிவரக் கண்டோர்.

     (இ - ள்.) மண்புலம் திசை வான்புதை பூமியுள் மறைந்து -
நிலவுலகினையும் திக்குகளையும் வானுலகினையும் மூடிய புழுதியுள் மறைந்து,
கொட்புறும்பரி - சுழன்றுவருங் குதிரைகள், வழிவர - வழியில் வருதலை,
சதங்கைதார் ஒலியினும் - (அவற்றின்) சதங்கை மாலையும் கிண்கிணி
மாலையுமாகிய இவற்றின் ஒலியாலும், குளிர்வான் பெட்புறும் குரல் ஒலியினும்
- (நீருண்டு) குளிர்ந்த முகிலும் விரும்பும் கனைப்பொலியாலும், செவியினில்
கண்டோர் - காதினாற் கண்டோரும், பிறிது கட்புலங்களால் கண்டிலர் -
வேறு கண்களாற் காணாதவராயினர்.

     வழி வரக் கண்டோர் செவியாலன்றிக் கண்ணாற் கண்டிலர் எனினும்
அமையும். (47)

         [கொச்சகக் கலிப்பா]
தரங்கமெறி முத்திவை விலாழியல தார்மா
இரங்குமொலி யல்லதிரை யேங்குமொலி யின்ன*
துரங்கமல மற்றிவை சுரர்க்கரச னின்றும்
புரங்கொல விடுத்திட வரும்புணரி யென்பார்.

     (இ - ள்.) இவை விலாழிஅல - இவை வாய் நுரைகள் அல்ல;
தரங்கம் எறி முத்து - கடலினலைகள் வீசும் முத்துக்களாம்; இன்ன தார்மா
இரங்கும் ஒலி அல்ல - இவை கிண்கிணி மாலையை யணிந்த குதிரைகளின்
கனைப் பொலியல்ல; திரை எங்கும் ஒலி - அலைகள் ஒலிக்கும் ஒலியாம்;
இசை துரங்கம் அல - இங்கு வருபவை குதிரைகள் அல்ல; சுரர்க்கு அரசன்
இன்றும் புரம் கொல விடுத்திட - தேவேந்திரன் இப்பொழுதும் இந்நகரத்தை
அழித்தற் பொருட்டு விடுத்தலால், வரும் புணரி என்பார் - வருகின்ற
கடலாம் என்று கூறுவர்.

     முன்பு இந்திரன் கடலை ஏவினமையால் ‘இன்றும்’ என்றார். புரம் -
இந்நகர்; சுட்டு வருவிக்க. விலாழி முதலிய பொருள்களை மறுத்து முத்து
முதலியனவாக உருவகப் படுத்தினமையால் இச் செய்யுள்
அவநுதி யுருவகவணி. (48)


     (பா - ம்.) * இன்னும்.