பக்கம் எண் :

302திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அறுபதாவது பரி நரியாக்கி வையை யழைத்த படலம்

              [கலிநிலைத்துறை]
ஞான நாயக னாணையா னரிபரி வெள்ளம்
ஆன வாறுரை செய்துமீண் டப்பரி நரியாய்ப்
போன வாறுகண் டமைச்சரைப் புரவலன் கறுப்ப
வான வாறுபோல் வையைநீர் வந்தவா றுரைப்பாம்.

     (இ - ள்.) ஞான நாயகன் ஆணையால் - அறிவுருவாகிய இறைவன்
ஆணையினால், நரி பரிவெள்ளமானவாறு உரைசெய்தும் - நரிகள் குதிரைப்
பெருக்காகி வந்த திருவிளையாடலைக் கூறினேம்; மீண்டு - மீள, அப்பரி
நரியாய்ப் போன வாறு கண்டு - அக்குதிரைகள் நரிகளாய்ப்
போனதன்மையைப் பார்த்து, அமைச்சரைப் புரவலன் கறுப்ப -
மந்திரியாராகிய வாதவூரடிகளை மன்னவன் ஒறுக்க, வான ஆறுபோல் -
வாள் யாற்றினைப்போல, வையை நீர் வந்தவாறு உரைப்பாம் - வையையாறு
நீர் பெருகிவந்த திருவிளையாடலை (இனிக்) கூறுவாம்.

     கறுத்தல் - வெகுளல்; ஒறுத்தலை யுணர்த்திற்று. பதிகத்துள் ‘பரிகள்
நரியாக்கியது’ என்றே இருப்பினும் இச்செய்யுள் ‘வையைநீர்
வந்தவாறுரைப்பாம்’ என்று கூறுதலானும், படலமுடிவில் வையை வந்தமை
உரைக்கப்பட்டிருத்தலானும் ‘பரிநரியாக்கி வையை யழைத்த படலம்’ என்னும்
பெயர் பொருந்துமாறு காண்க. (1)

நெருங்கு தூரிய முழக்கமுந் தானையு நிமிர
மருங்கி லாதவர் வந்தெதிர் மங்கல மேந்த
அரங்கொல் வேலினா னருளிய வரிசையோ டணைந்து
புரங்கொல் வேதியர்க் கன்பர்தந் திருமனை புகுந்தார்.

     (இ - ள்.) நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர - நெருங்கிய
இயங்களின் பேரொலியும் சேனைகளின் ஆரவாரமும் ஓங்க, மருங்கு
இலாதவர் எதிர்வந்து மங்கலம் ஏந்த - இடையில்லாத பெண்கள் எதிரே
வந்து எட்டு மங்கலங்களையும் ஏந்த, புரங்கொல் வேதியார்க்கு அன்பர் -
திரிபுரங்களை யழித்த அந்தணராகிய இறைவர்க்கு அன்பராகிய வாதவூரர்,
அரம்கொல் வேலினான் அருளிய வரிசையோடு அணைந்து - அரத்தையும்
மழுக்கும் வைரவேற் படையினையுடைய பாண்டியன் அளித்த சிறப்புடன்
சென்று, தம் திருமனை புகுந்தார் - தமது தெய்வத்தன்மை பொருந்திய
மனையிற் புகுந்தனர்.