பக்கம் எண் :

பரி நரியாக்கி வையை யழைத்த படலம் 303



மிக நுண்ணிய மருங்குலை யுடையாரென்பார் அதிசயவகையால்
‘மருங்கிலாதவர்’ என்றார். அரங்கொல்வேல் - அரத்தால் அராவப்பட்ட
வேலுமாம். (2)

உடுத்த சுற்றமுங் கழகமு மொட்டிய நட்பும்
அடுத்த கேண்மையால் வினவுவா ரவரவர்க் கிசைய
எடுத்த வாய்மையான் முகமனு மகிழ்ச்சியு மீந்து
விடுத்த வாதவூ ராளிகள் வேறிடத் திருந்து.

     (இ - ள்.) உடுத்த சுற்றமும் கழகமும் ஒட்டிய நட்பும் - சூழ்ந்துள்ள
சுற்றத்தவரும் கற்றோரும் நெருங்கிய நண்பருமாய், அடுத்த கேண்மையால்
வினவுவார் அவரவர்க்கு - பொருந்திய கேண்மையினால் வினவுவாராகிய
அவரவருக்கு, இசைய - பொருந்த, எடுத்த வாய்மையால் - எடுத்துக்கூறிய
இன்சொற்களால், முகமனும் மகிழ்ச்சியும் ஈந்து - முகமனையும் மகிழ்வையும்
அளித்து, விடுத்த வாதவூராளிகள் - அவரவர் இருக்கைக்குச் செல்லவிடுத்த
வாதவூரடிகள், வேறு இடத்து இருந்து - தனியிடத்தில் அமர்ந்து.

     கழகம் - கற்றோர் கூட்டம். நட்பு என்னும் பெயர் அதனை
யுடையாரை உணர்த்திற்று. சுற்றமாகியும் கழகமாகியும் நட்பினராகியும்
வினவலுறும் அவரவர்க்கு என விரிக்க. வாய்மை - வாய்மொழி. முகமன் -
உபசாரம். ஆளி - ஆளு தலையுடையார்; தலைவர்; கள் விகுதி உயர்வுப்
பன்மையில் வந்தது. (3)

கரந்தை சூடிய வாலவாய்க் கண்ணுத னாமன்
றிரந்த வண்ணமே யாங்கொடு போகிய வெல்லாம்
பரந்த வன்பருந் தானுங்கொண் டெம்மையும் பணிகொண்
டரந்தை தீர்த்தன னன்றியு மரசனுக் கிசைய.

     (இ - ள்.) கரந்தை சூடிய ஆலவாய்க் கண்ணுதல் - கரந்தை
மலரினை அணிந்த திருவாலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரக்கடவுள்,
நாம் அன்று இரந்த வண்ணமே - நாம் முன்பு குறையிரந்து வேண்டிய
வண்ணமே, யாம் கொடுபோகிய எல்லாம் - யாம் கொண்டுபோன
பொருளெல்லாவற்றையும், பரந்த அன்பரும் தானும் கொண்டு - மிக்க
அன்பர்களும் தானும் ஏற்றுக்கொண்டு, எம்மையும் பணி கொண்டு அரந்தை
தீர்த்தனன் - எம்மையும் அடிமைகொண்டு என் பிறவித்துன்பத்தையும்
போக்கினன்; அன்றியும் - அல்லாமலும், அரசனுக்கு இசைய - மன்னனுக்கு
மனம் பொருந்த.

     அன்பரும் தானும் கொண்டு அரந்தைதீர்த்தனன் என்பது,

     ழுதானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்ழு என்புழிப்போல
வந்த வழுவமைதி. (4)