பக்கம் எண் :

மாமனாகவந்து வழக்குரைத்த படலம்331



     இம்மென : விரைவுக்குறிப்பு. அறத்தவிசோராற் கேட்டறிந்தென்க.
வெறுத்தல் செறிதலாகலின் வெறுப்ப என்பதற்கு மிக எனப் பொருள் கொள்க.
உள் வெறுப்ப என்னும் பாடத்திற்கு மனம் வெறுக்க என்றுரைத்துக் கொள்க.
வேந்தன் அறிந்து அடைந்து நல்கிப் புதுக்கினான் என வினை முடிவு செய்க.
(36)
[கலி நிலைத்துறை]
பூத நாயகன் பூரண சுந்தரப் புத்தேள்
பாத சேகரன் வரகுண பாண்டியன் புயத்தில்
ஓத நீருல கின்பொறை சுமக்கவைத் தும்பர்
நாதர் சேவடித் தாமரை நகைநிழ லடைந்தான்.

     (இ - ள்.) பூதநாயகன் பூதங்களுக்குத் தலைவனும், பூரண சுந்தரப்
புத்தேள் - எங்கும் நிறைந்துளோனுமாகிய சோம சுந்தரக் கடவுளுடைய,
பாத சேகரன் - திருவடியை முடியிற் கொண்ட சுந்தரேச பாத சேகர
பாண்டியன், வரகுணபாண்டியன் புயத்தில் - வரகுணபாண்டியன் தோளின்
கண், ஓத நீர் உலகின் பொறை சுமக்க வைத்து - கடல் சூழ்ந்த புவியின்
சுமையைத் தாங்க வைத்து, உம்பர் நாதர் சேவடித் தாமரை நகை நிழல்
அடைந்தான் - தேவ தேவராகிய சிவபெருமான் திருவடித் தாமரையின்
ஒள்ளிய நிழலிற் கலந்தனன்.

     பூதம் - ஆன்மா; ஐம்பூதம் என்றும், சிவகணம் என்றும்
கொள்ளலுமாம். புயத்தில் பொறை வைத்து என்க; சுமக்க : இடைப்பிற
வரல். (37)

                         ஆகச் செய்யுள் - 1962.