நாற்பதாவது
வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலம்
|
[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
|
பண்கொண்ட
வேதமுத லிடையீறு நாடரிய
பரன்மாம னாகி* யொரு வணிகன்
எண்கொண்ட காணிபொருள் கவர்ஞாதி மாதுலரை
யெதிரேறி வென்றபடி யிதுவாந்
தண்கொண்ட நேமிவர குணதேவ னெய்துபழி
தன்னைத் துடைத்தனைய மனவன்
கண்கொண்டு காணவுயர் சிவலோக மதுரைதனில்
வருவித்த காதையினி மொழிவாம். |
(இ
- ள்.) பண் கொண்ட வேதம் - இசையினைக் கொண்ட
மறையினாலும், முதல் இடை ஈறு நாடரிய பரன் - முதலும் நடுவும் ஈறும்
நாடுதற்கரிய இறைவன், மாமனாகி - மாமனாக - வந்து, ஒரு வணிகன் - ஒரு
வணிகச் சிறுவனது, எண் கொண்ட காணி பொருள் கவர் ஞாதி மாதுலரை -
மதிப்பினையுடைய விளைநிலங்களையும் பிற பொருளையும் வௌவிய
ஞாதிகளாகிய மாமன்மாரை, எதிர் ஏறி வென்றபடி இது ஆம் - எதிர்த்து
மன்றில் ஏறி வென்றருளிய திருவிளையாடல் இதுவாகும், தண்கொண்ட நேமி
வரகுண தேவன் - தண்ணிய ஆக்கினா சக்கரத்தையுடைய வரகுண தேவன்,
எய்து பழி தன்னைத் துடைத்து - அடைந்த கொலைப் பாவத்தினைப்
போக்கி, அனைய மன்னவன் - அந்த மன்னன், கண் கொண்டு காண -
கண்களாற் றரிசிக்க, உயர் சிவலோகம் உயர்ந்த சிவலோகத்தை, மதுரைதனில்
வருவித்த காதை - மதுரையில் வருவித்துக் காட்டிய திருவிளையாடலை,
இனி மொழிவாம் - இனிக் கூறுவாம்.
வேதத்தின்
முதல் இடை ஈறுகளால் நாடரிய என்றுரைப்பாருமுளர்.
தனபதிக்கு ஞாதிகளும், அவன் தங்கை மைந்தனுக்கு மாமன்மாரும் என்பார்
'ஞாதி மாதுலர்' என்றார். தேவர் என்பது சோழ, பாண்டிய வேந்தர்களுக்குச்
சிறப்புப் பெயராக வழங்கியுளது. இம் மன்னனைப் 'பெரிய அன்பின் வரகுண
தேவர்' என்பர் பட்டினத்தடிகளும். மன்னவன் என்பதில் னகரம் தொக்கு
நின்றது. கண் கொண்டு என விதந்தோதினார், காண்டலருமை நோக்கி. (1)
(பா
- ம்.) * பரமாமனாகி.
|