பக்கம் எண் :

தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்333



     (இ - ள்.) எல்லவன் உச்சி நீந்தும் எல்லையில் - சூரியன்
உச்சியி னின்றுங் கடந்து செல்லுங் காலததில், நான்கும் ஆறும் வல்லவர் -
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் (கற்று) வல்லவர், சூதன் ஓதி
வகுத்த மூவாறு கேள்வி சொல்ல - சூதமுனிவன் கூறிப் பாகுபாடு செய்த
பதினெண் புராணங்களையுஞ் சொல்ல, உள்மலர்ந்தும் - அகமகிழ்ந்தும்,
ஏனை மனுமுதல் துறைமாண் கேள்வி நல்லன - மற்றும் மனுநூல் முதலிய
நீதியின் மாண்பமைந்த நூல்களுள் நல்லவற்றை, நயந்து கேட்டும் - விரும்பிக்
கேட்டும், நல் பகற்போது நீத்து - (இங்ஙனம்) நல்ல பகற்பொழுதினைக்
கழித்தும் எ - று.

     உச்சி நீந்தும் எல்லை - பிற்பகல். நான்கு, ஆறு என்னும்
எண்ணுப்பெயர்கள் அத்தொகையையுடைய வேதங்களையும் அங்கங்களையும்
குறிப்பன வாயின. கேள்வி, கேட்கப்படும் நூலைக் குறித்தது. (57)

கலைக்குரை விரிப்பா ரென்ன வறுமையிற் கல்வி போலப்
புலப்படா மருங்கு னல்லா ரெந்திரப் புலவன் பூட்டி
அலைத்திடு பாவை போனின் றாடல்செய் யாடற் கண்ணும்
நலத்தகு பாடற் கண்ணு நல்லரு ணாட்டஞ் செய்தும்.

     (இ - ள்.) வறுமையில் கல்விபோல - வறுமைக் காலத்திலேகல்வி
(விளங்காமை) போல, புலப்படா மருங்குல் நல்லார் - கண்ணுக்குத்
தோன்றாத இடையையுடைய பெண்கள், எந்திரப்புலவன் - சூத்திரப் பாவை
ஆட்டும் உணர்ச்சியின்மிக்கான் ஒருவனால், பூட்டி அலைத்திடு பாவைபோல்
நின்று - அக்கயிற்றிற் பூட்டி ஆட்டப் பெறுகின்ற பாவைபோல நின்று,
கலைக்கு உரை விரிப்பார் என்ன - பரத நூலுக்குப் பொருள் கூறுவார்
போன்று, ஆடல் செய் ஆடல் கண்ணும் - ஆடுகின்ற ஆடலின் கண்ணும்,
நலத்தகு பாடல் கண்ணும் - நலம் நிறைந்த பாடலின் கண்ணும், நல் அருள்
நாட்டம் செய்தும் - நல்ல அருட்பார்வை வைத்தும் எ - று.

"நற்பொருணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்"

என்பது தமிழ்மறையாகலின் ‘வறுமையிற் கல்விபோலப் புலப்படா’ என்றார்.
பாவை யாடலின் வேற்றுமை யின்றென்றார் பொருள்நன்கு விளங்கலின் ‘உரை
விரிப்பாரென்ன’ என்றார்; இவரது ஆடல் கொண்டு அந்நூற் பொருள்
தெளியலாகும் என்பதாயிற்று. என்ன ஆடல் செய் எனக் கூட்டுக. (58)

இன்னிலை யொழுகுந் தொல்லோ ரியற்றிய தருமம் வேறும்
அந்நிலை நிறுத்தும் வேள்வி யறம்பல வாக்கஞ் செய்ய
நின்னிதி யளித்து வேள்வி நடாத்தியுஞ் செல்வங் கல்வி
தன்னிரு கண்க ளாகத் தழைந்திட வளர்க்கு நாளும்.

     (இ - ள்.) இல் நிலை ஒழுகும் தொல்லோர் இயற்றிய தருமம் -
இல்லறத்தி லொழுகும் முன்னோர்செய்த அறங்களையும், வேறும் - மற்றும்,
அந்நிலை நிறுத்தும் வேள்வி - அந்த இல் நிலையை நிலைபெறச் செய்யும்