பக்கம் எண் :

338திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கூலி யாளாக வந்து எனது ஏவலைச் செய்பவரைக் கண்டிலேன்; ஏழையேன்
இனி என் செய்கேன் - ஏழையாகிய யான் இனி என் செய்வேன்.

     இறைவன் தேவர்க்கும் அரியனாதலையும் அன்பர்க்கு
எளியனாதலையும்,

"மூவ ராலு மறியொணாமுத லாய வானந்த மூர்த்தியான்
யாவ ராயினு மன்ப ரன்றி யறியொணா மலர்ச் சோதியான்"

என்னும் திருவாசகத்தா லறிக. அமைச்சர் சீற்றத்துடன் கடுகி வந்து ஒறுக்குமுன் என்பாள் ‘சீற்றங்கடுகுமுன்’ என்றாள். (13)

கூலியாள்வருவ துண்டோ வென்றுதன் கொங்கை முற்றத்
தாலிபோற் கண்ணீர் சோர்வாள் குறித்துமுன் பருத்தும்பிட்டை
வேலைநீர் ஞாலங் காண மிசைந்தவ ளிடும்பை தீர்ப்பான்
பாலினேர் மொழியாள் பாக மறைத்தருட் படிவங் கொள்வார்.

     (இ - ள்.) கூலியாள் வருவது உண்டோ என்று - கூலியாள்
வருவதுண்டோவென்று கருதி, தன் கொங்கை முற்றத்து - தனது கொங்கை
யிடத்தில், ஆலி போல் கண் நீர் சோர்வாள் - மழைத்துளிபோலக் கண்ணீர்
சிந்தும் அவ்வந்தி, முன்பு குறித்து அருத்தும்பிட்டை - முன்பு மனத்தால்
நினைத்து (யாரும் அறியாமல்) புவியிலுள்ளார் காண உண்டு, அவள்
இடும்பை தீர்ப்பான் - அவள் துன்பத்தை நீக்கும் பொருட்டு, பாலின்நேர்
மொழியாள் பாகம் மறைத்து - பாலை யொத்த மொழியினையுடைய
பிராட்டியாரின் பாகத்தை மறைத்து, அருள் படிவம் கொள்வார் - அருளல்
உருவங் கொள்வாராயினர்.

     குறித்து - உள்ளத்தாற் சிந்தித்து. உலகினர் அறியாது முன்பு அருந்திய
பிட்டை இப்பொழுது அறிய உண்டு என்க. பாலினேர், சாரியை நிற்க உருபு
தொக்கது. (14)

குறட்குநீ ரருத்தி வையைக் குடிஞையா யொழுகுங் கங்கை
அறற்குழல் பிரிவி னாற்றா தன்பினா லவளைக் காண்பான்
மறக்கய னெடுங்க ணாளை வஞ்சித்து வடிவ மாறிப்
புறப்படு வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி.

     (இ - ள்.) குறட்கு நீர் அருத்தி - குண்டோதரனுக்கு நீரினை ஊட்டி,
வையைக் குடிஞையாய் ஒழுகும் - வையையாறாகச் செல்லா நிறகும், கங்கை
அறல் குழல் பிரிவின் ஆற்றாது - கங்கை என்னும் கருமணலாகிய
கூந்தலையுடைய நாயகியின் பிரிவினைப் பொறுக்கலாற்றாது, அவளை
அன்பினால் காண்பான் - அந் நங்கையை அன்போடு காணுதற்கு, மறக்கயல்
நெடுங்கணாளை வஞ்சித்து - தருக்குடைய கயல் போலும் நீண்ட
கண்களையுடைய உமையம்மையை வஞ்சித்து, வடிவம் மாறி - திருவுருவம்
மாறி, புறப்படுவாரைப்போல் - புறப்படுவாரைப்போல, போதமூர்த்தி
போதுவார் - ஞான மூர்த்தியாகிய சோம சுந்தரக்கடவுள் செல்வாராயினர்.