பக்கம் எண் :

மண் சுமந்த படலம்339



     குடிஞை - யாறு. அறற்குழல - பெண் என்னுந் துணையாய்
நின்றதுமாம். பிரிவின் - பிரிவினால் எனலும் பொருந்தும். இது
தற்குறிப்பேற்றவணியின்பாற்படும். (15)

                 [கொச்சகக் கலிப்பா]
அழுக்கடைந்த பழந்துணியொன் றரைக்கசைத்து விழுத்தொண்டர்
குழுக்கடந்த விண்டைநிகர் சுமையடைமேற் கூடைகவிழ்த்
தெழுக்கடந்து திசைகடந்திட் டிணைகடந்த திருத்தோண்மேன்
மழுக்கடைந்து விளங்கியவாய் மண்டொடுதிண் படையேந்தி.

     (இ - ள்.) அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து -
அழுக்குச் சேர்ந்த பழைய துணி ஒன்றினை இடையிற்கட்டி, விழுத்தொண்டர்
குழுக்கள் தந்த இண்டை நிகர் சுமையடைமேல் - சீரிய தொண்டர்
கூட்டங்கள் கட்டிச் சாத்திய இண்டை மாலையை ஒத்த சும்மாட்டின்மேல்,
கூடை கவிழ்த்து - கூடையினைக் கவிழ்த்து, எழுக்கடந்து திசை கடந்திட்டு
இணைகடந்த திருத்தோள் மேல் - தூணைவென்று திக்குகளைக் கடந்து
உவமையைக் கடந்த அழகிய தோளின் மேல், மழுக்கு அடைந்து விளங்கிய
வாய் - மழுங்குதலையுற்று விளங்கிய வாயினை யுடைய, திண் மண்தொடு
படை ஏந்தி - திண்ணிய மண்வெட்டியை ஏந்தி.

     மழுங்கு - மழுக்கு என வலித்தது. பலகாலும் மண்ணை வெட்டுதலால்
மழுங்கிய வாய் என்க. (16)

திடங்காதல் கொண்டறவோர் திருவேள்வி தருமமுதும்
இடங்காவல் கொண்டுறைவா ளருத்தமுது மினிதுண்டும்
அடங்காத பசியினர்போ லன்னைமுலைப் பாலருந்த
மடங்காத பெருவேட்கை மகவுபோற் புறப்பட்டார்.

     (இ - ள்.) அறவோர் திடம் காதல் கொண்டு - முனிவர்கள்
உறுதியாகிய அன்பினைக் கொண்டு, திருவேள்விதரும் அமுதும் - சிறந்த
வேள்வியின்கண் தருகின்ற அவியையும், இடம் காவல் கொண்டு உறைவாள்
அருத்து அமுதும் - இடப்பாகத்தின்கண் காவல் கொண்டு உறைபவராகிய
பிராட்டியார் ஊட்டும் அமுதையும், இனிது உண்டும் - நன்றாக உண்டும்,
அடங்காத பசியினர் போல் - அடங்காத பசியினையுடையார் போல,
அன்னை முலைப்பால் அருந்த மடங்காத பெரு வேட்கை மகவுபோல்
புறப்பட்டார் - தாயின் முலைப்பாலைப் பருகுதற்கு மடங்காத
பேரவாவினையுடைய மகவு போலப் புறப்பட்டருளினர்.

     அடங்காத பசியினர் என்னும்படி மகவுபோற் புறப்பட்டார் என்க. (17)