பக்கம் எண் :

342திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     காஞ்சி - இடையிலணியும் அணிவிசேடம்; இருகோவையுள்ளது.
காந்தள் மலர்க்கை எனக் கூட்டுக. இம்முறை - இங்கே கூறியமுறை; பாதம்
முதலாகக் கூந்தல் இறுதியாக. இவ்விலக்கணத்தால் நினைத்துமாம். (74)

கோலயாழ்த் தெய்வம் பராய்க்கரங் குவித்துக்
     கொழுஞ்சுடர்ப் பசுங்கதிர் விளக்கம்
போலநூற் பொல்லம் பொத்துபொன் னிறத்த
     போர்வைநீத் தவிழ்கடி முல்லை
மாலைமேல் வீக்கிப் பத்தர்பின் கிடப்ப
     மலர்க்குழ றோய்கூசற் கிடத்திச்
சேலைநேர் விழியாண் மாடகந் திரித்துத்
     தெறித்தனள் பண்ணறிந் திசைப்பாள்.

     (இ - ள்.) சேலை நேர் விழியாள் - சேலை ஒத்த கண்களையுடைய
விச்சாவதிஎன்பாள், கோல யாழ்த் தெய்வம் பராய் - அழகிய யாழிற் குரிய
தெய்வத்தைத் துதித்து, கரம் குவித்து - கை கூப்பி, கொழுஞ் சுடர்ப்
பசுங்கதிர் விளக்கம்போல - கொழுவிய ஒளியையுடைய இள ஞாயிற்றின்
ஒளிபோல விளங்கும், நூல் பொல்லம் பொத்து பொன் நிறத்த போர்வை
நீத்து - நூலால் தைத்த பொன்னின் நிறத்தினை யுடைய போர்வையைக்
கழற்றி, அவிழ கடி முல்லை மாலைமேல்வீக்கி - இதழ்விரிந்த மணமுடைய
முல்லை மாலையை அதன்மேற் சூட்டி, பத்தர் பின் கிடப்ப மலர்க்குழல்
தோய் சுவல் கிடத்தி - பத்தர் பின் புறத்திலிருக்கப் பூவையணிந்த கூந்தல்
தோய்ந்த பிடரியிற் சார்த்தி, மாடகம் திரித்து - முறுக்காணியை முறுக்கி,
தெறித்தனள் பண் அறிந்து இசைப்பாள் - (நரம்பைத்) தெறித்துப் பண்ணின்
வகையை அறிந்து பாடுகின்றாள் எ - று.

     யாழ்த் தெய்வம் - மாதங்கி யென்னுந் தெய்வம் என்பர்;

"அணங்கு மெய்ந் நின்ற வமைவரு காட்சி"

என்னும் பொருநராற்றுப்படையுங் காண்க. பொல்லாம் பொத்தல் இரண்டு
தலையுங் கூட்டித் தைத்தல் : ஒரு சொல். மாடகம் - முறுக்காணி. யாழின்
உறுப்புக்களை,

"கோடே பத்த ராணி நரம்பே
மாடக மெனவரும் வகையின தாகும்"

என்பதனாலறிக. பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்பனவும்,
அவற்றின் திறங்களுமாம்.

"விளக்கழ லுருவின் விசியுறு பச்சை
யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை"

எனப் பொருநராற்றுப்படையுள் பொல்லம் பொத்திய போர்வையினியல்பு
கூறியிருப்பது இங்கு நோக்கற் பாலது. (75) ‘