பக்கம் எண் :

342திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) தெள்ளிஅடு சிற்றுண்டி - மாவினைத் தெள்ளிச் செய்த
பிட்டினை, சிக்கு அடைந்த பொதி நீக்கி - அழுக்கடைந்த மூடிய ஆடையை
நீக்கி, அள்ளி எடுத்து அப்பா அருந்து என்று இட்டாள் - அள்ளி யெடுத்து
அப்பனே உண்பாயாக என்று கூறி அளித்தனன்; அரைக்கு அசைத்த புள்ளி
உடைத் துகில் நீத்தார் - இடையிற் கட்டிய புள்ளியை யுடைய
புலித்தோலுடையை நீக்கி வந்தவர், புறத்தானை விரித்து ஏந்தி -
முன்றானையை விரித்து ஏந்தி, ஒள்ளியது என்று - இது மிக
நன்றாயிருக்கிறதென்று, அவள் அன்பும் உடன் கூட்டி அமுது செய்வார் -
அவளது அன்பையும் ஒருங்கு சேர்த்து அருந்துவாராயினர்.

     சிக்கு - அழுக்கு. பொதி - மூடு துணி, அன்பினால் ‘அப்பா’ என்றாள்.
ஒள்ளியது - சிறந்தது. உண்டலை அமுது செய்தல் என்பது பெரியோர்
சம்பிரதாயம். (22)

அன்னைமுலைத் தீம்பாலி னரியசுவைத் திஹஃதந்தத்
தென்னவனா யுலகாண்ட திருவால வாயுடைய*
மன்னர்பிரான் றனக்கேயா மென்றென்று வாய்ப்பெய்து
சென்னியசைத் தமுதுசெய்தார் தீவாய்நஞ் சமுதுசெய்தார்.

     (இ - ள்.) அன்னை முலைத் தீம்பாலின் அரிய சுவைத்து இஃது -
தாயின் முலைப்பாலைவிட அரிய சுவையை யுடையதாகிய இப்பிட்டு, அந்தத்
தென்னவனாய் உலகு ஆண்ட - அந்தச் சுந்தர பாண்டியனாய் இந்நிலவுலகை
ஆண்டருளிய, திரு வாலவாயுடைய மன்னர் பிரான் தனக்கேயாம் என்று
என்று - திருவாலவாயினையுடைய மன்னர் பெருமானுக்கே உரியதாகும்
என்று சொல்லிச் சொல்லி, வாய்ப் பெய்து - வாயிற்போட்டு, தீவாய் நஞ்சு
அமுது செய்தார் - தீயைப்போலும் வெம்மைவாய்ந்த நஞ்சினை யுண்ட
அவ்விறைவர், சென்னி அசைத்து அமுது செய்தார் - முடிதுளக்கி
அருந்தினர்.

     அந்த மன்னர் பிரான் எனக் கூட்டுக. திருவாலவாயுடைய மன்னர்
பிரானுக்கே ஆகுமென்று பிட்டினைப் புகழ்ந்துரைப்பார் போன்று உண்மை
கூறம் நயம் பாராட்டற்குரியது. உவப்பாலும் வியப்பாலும் சென்னியசைத்தார்.
கொடிய நஞ்சினையும் அமுது செய்தவர் இப்பிட்டினை விடுவரோ என்னும்
நயந் தோன்ற ‘தீவாய்நஞ் சமுது செய்தார்’ எனப் பெயர் கூறினார். (23)

தந்தையொடு தாயின்றித் தனிக்கூலி யாளாக
வந்தவெனக் கொருதாயா யருள்சுரந்து மாறாத
இந்தவிளைப் பொழித்தனையே யினிவேலைத் தலைச்சென்றுன்
சிந்தைகளிப் பெழவேலை செய்வேனென் றிசைத்தெழுந்தார்.

     (இ - ள்.) தந்தையொடுதாய் இன்றி - தந்தையும் தாயுமில்லாமல்,
தனிக் கூலியாளாக வந்த எனக்கு - தனித்த கூலியாளாக வந்த எனக்கு, ஒரு
தாயாய் அருள் சுரந்து - ஒரு அன்னையாகி அருள் சுரந்து, மாறாத இந்த
இளைப்ப ஒழித்தனையே - நீங்காத இந்த இளைப்பினை நீக்கினையே