இவ்வண்ண மிவரொருகா லிருகான்மண் சுமந்திளைத்துக்
கைவண்ண மலர்கன்றக் கதிர்முடிமேல் வடுவழுந்த
மைவண்ண னறியாத மலரடிசெம் புனல்சுரந்து
செவ்வண்ணம் படைப்பவொரு செழுந்தருவின் மருங்கணைந்தார். |
(இ
- ள்.) இவர் இவ்வண்ணம் ஒரு கால் இருகால் மண் சுமந்து
இளைத்து - இவர் இங்ஙனம் ஒரு முறை இருமுறை மண்ணைச் சுமத்தலால்
உடல் மெலிந்து, கைவண்ணமலர் கன்ற - திருக்கைகளாகிய செந்நிறமுடைய
தாமரை மலர்கள் கன்றவும், கதிர்முடிமேல் வடு அழுந்த - ஒளி பொருந்திய
முடியின்கண் வடு அழுந்தவும், மைவண்ணன் அறியாத மலர் அடி - முகில்
போலும் நிறமுடைய திருமாலறியாத தாமரை மலர் போலுந்திருவடிகள்,
செம்புனல் சுரந்து செவ்வண்ணம் படைப்ப - குருதி சுரந்து செந்நிறத்தைப்
பெறவும், ஒரு செழுந்தருவின் மருங்கு அணைந்தார் - ஒரு செழிய
மரத்தினது நிழலை அடைந்தனர்.
கன்ற
முதலிய எச்சங்கள் காரணப்பொருளன. கொன்றை நீழல் என்பர்
கடவுள்மாமுனிவர். (27)
தருமேவு மலைமகளுஞ் சலமகளு மறியாமற்
றிருமேனி முழுதுநில மகடீண்டித் திளைப்பெய்தக்
குருமேவு மதிமுடியைக் கூடையணை மேற்கிடத்தி
வருமேரு வனையார்தம் வடிவுணர்ந்து துயில்கின்றார். |
(இ
- ள்.) தருமேவும் மலைமகளும் - மரங்கள் பொருந்திய
மலையரையன் புதல்வியாராகிய உமையம்மையாரும், சலமகளும் அறியாமல்
- கங்காதேவியாரும் அறியாமல், திருமேனி முழுதும் - தமது திருவுடல்
முழுதையும், நிலமகள் தீண்டித் திளைப்பெய்த - நிலமகள் பரிசித்துத்
திளைக்க, குருமேவும் மதிமுடியை - நிறம் பொருந்திய சந்திரனை யணிந்த
முடியினை, கூடை அணைமேல் கிடத்தி - கூடையாகிய அணையின் மேல்
வைத்து, வருமேரு அனையார் - வளருகின்றமேரு மலையை யொத்த
இறைவர், தம் வடிவு உணர்ந்து துயில்கின்றார் - தமது வடிவினை உணர்ந்து
துயில்கொள்கின்றார்.
தருமேவு
என்றது மலைக்கு அடை. குரு - நிறம்; ஒளி. அணை -
தலையணை. துயிலுதல் ஓர் விளையாட்டேயன்றி, ஏனையோர் போல
மயக்கத்தால். துயில்கின்றாரல்லர் என்பார் தம் வடிவுணர்ந்து துயில்கின்றார்
என்றார். வடிவுணர்ந்து - சொரூபத்தை உணர்ந்து கொண்டு. (28)
அத்தருவே யாலநெடுந் தருவாக வலைபுரட்டித்
தத்திவரும் புனலடைப்பார் சனகாதி முழுதுணர்ந்த
மெய்த்தவராய்க் கண்களிப்ப மெய்யுணர்ச்சி மோனமயச்
சுத்தவுருத் தெளிவிப்பா ரெனத்துயிலுந் துயிலுணர்ந்தார். |
|