(இ
- ள்.) பரமன் எண்குணன் பசுபதி - (அங்ஙனந் தீர்த்தருளிய)
பரமனும் எட்டுக் குணங்களையுடையவனும் பசுபதியுமாகிய சோம சுந்தரக்
கடவுள், வரகுணன் பற்றும் பிரம வன்பழி - வரகுணனைப் பிடித்த கொடிய
பிரமசாயை, இடைமருது இடைவிட்டுப் பெயர வரம் அளித்தவாறு என்னை
கொல் - திருவிடை மருதூரின்கண் விட்டு நீங்குமாறு வரங் கொடுத்தது என்னையோ, வள்ளலே
இதனைத் திரம் உற எமக்குப் புகல் என -
வள்ளலே இச்செய்தியை எங்களுக்கு ஐயுறவு நீங்கக் கூறியருளுவாயாக என்று
வேண்ட, முனிவர்கோன் செப்பும் - முனிவர் வேந்தனாகிய அகத்தியன்
கூறியருளுவான்.
திரம்
- உறுதி. கொல், அசை. (65)
பூத நாயகன் சுந்தரன் புண்ணிய மூர்த்தி
யாத லாலன்ன தலத்துறை யடியவ ரஞ்சிப்
பாத கஞ்செயா தொழுகுறூஉம் படிநினைந் தினைய
தீது றூஉமபழி தனையிடை மருதினிற் றீர்த்தான். |
(இ
- ள்.) பூதநாயகன் சுந்தரன் - பூதங்கட்கு இறைவனாகிய சோம
சுந்தரக் கடவுள், புண்ணிய மூர்த்தி ஆதலால் - அறவடிவினன் ஆதலின்,
அன்னதலத்து உறை அடியவர் - அந்தப் பதியில் உறையும் அடியார்கள்,
அஞ்சி பாதகம் செய்யாது ஒழுகுறூஉம்படி நினைந்து - பயந்து பாவஞ்
செய்யாது ஒழுகுமாறு திருவுளங்கொண்டு, இனைய தீது உறூஉம் பழிதனை -
இந்தத் தீமை மிக்க பழியினை, இடைமருதினில் தீர்த்தான் -
திருவிடைமருதூரில் தீர்த்தருளினான்.
பூதம்
- ஆன்மா. அன்ன, இனைய என்பன சுட்டுத் திரிபுகள்.
அளபெடைகள் இன்னிசை நிறைக்க வந்தன. (66)
என்ற கத்திய முனியிறை யிறைகொடுத் தியம்ப
நன்றெ னச்சிரம் பணிந்து*மெய்ஞ் ஞானவா னந்தந்
துன்றி நற்றவர் சுந்தரச் சோதிசே வடிக்கீழ்
ஒன்று மற்புத வானந்த வுததியுட் குளித்தார்+. |
(இ
- ள்.) என்று அகத்தியமுளி இறை - என்று அகத்தியனாகிய முனி
மன்னன், இறை கொடுத்து இயம்ப - விடை கொடுத்தருள, நல்தவர் - நல்ல
தவத்தினையுடைய முனிவர்கள், நன்று எனச் சிரம் பணிந்து - நன்று என்று
சிரமசைத்து, மெய்ஞ்ஞானம் ஆனந்தம் துன்றி - உண்மையறி வானந்தத்தில்
தோய்ந்து, சுந்தரச் சோதி சேவடிக் கீழ் ஒன்றும் - சோம சுந்தரக் கடவுளின் சிவந்த
திருவடியின்கீழ்ப் பொருந்தும், அற்புத ஆனந்த உததியுள் குளித்தார்
- அற்புதமாகிய பேரின்பக் கடலில் மூழ்கினார்கள்.
அகத்தியனாகிய
முனியிறை என்க. இறை - விடை. மெய்ஞ்
ஞானவானந்தம் - சச்சிதானந்தம். (67)
(பா
- ம்.) * பனித்து. +களித்தார்.
|