பக்கம் எண் :

368திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



நாற்பத்தொன்றாவது விறகுவிற்ற படலம்

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
நெடியவன் பிரமன் றேட நீண்டவன் றென்னற் கேழின்
முடியதாஞ் சிவலோ கத்தைக் காட்டிய முறையீ தையன்
படிமிசை நடந்து பாடிப் பாணன்றன் விறகா ளாகி
அடிமையென் றடிமை கொண்ட வருட்டிற மெடுத்துச் சொல்வாம்.

     (இ - ள்.) நெடியவன் பிரமன் தேட நீண்டவன் - திருமாலும் பிரமனுந்
தேட (அவர்கட்குக் கிட்டாமல் ஒளிப்பிழம்பாய்) வளர்ந்த சோம சுந்தரக்
கடவுள், தென்னற்கு - வரகுண பாண்டியனுக்கு, ஏழின் முடியதாம்
சிவலோகத்தை - ஏழு உலகங்கட்கும் முடியாகவுள்ள சிவபுரத்தை, காட்டிய
முறை ஈது காட்டியருளிய திருவிளையாடல் இதுவாகும்; ஐயன் - (இனி) அவ்
விறைவனே, படிமிசை விறகு ஆள் ஆகி நடந்து பாடி - புவியின் மேல்
விறகு சுமந்து விற்கும் ஆளாகி நடந்து இசை பாடி, பாணன் தன் அடிமை
என்று அடிமை கொண்ட - பாணபத்திரனுக்கு அடிமை என்று கூறி அவனை
அடிமை கொண்டருளிய, அருள் திறம் எடுத்துச் சொல்வாம் - திருவருளின்
திறத்தை எடுத்துக் கூறுவாம்.

     ஏழு - ஏழுலகங்கள் : ஆகுபெயர். முடியது, அது பகுதிப் பொருள்
விகுதி. ஏழுலகங்களையும் அவற்றின் முடியாகச் சிவலோகம்
விளங்குதலையும்,

"புவலோகங் கடந்துபோய்ப் புண்ணியருக்
     கெண்ணிறந்த போக மூட்டுஞ்
சுவலோகங் கடந்துபோய் மகலோகஞ்
     சனலோகந் துறந்து மேலைத்
தவலோகங் கடந்துபோய்ச் சத்தியலோ
     கங்கடந்து தண்டு ழாயோன்
நவலோகங் கடந்துலக நாயகமாஞ்
     சிவலோக நண்ணி னாரே"

என, மேல் மலய்ததுவசனையழைத்த படலத்திற் கூறியிருப்பது காண்க.
வானோர்க்கும் அரியனாம் இறைவன் அடியார்க்கு எளியனாயிருக்குந்
தன்மை தோன்ற 'நெடியவன் பிரமன் றேட நீண்டவன்.......விறகாளாகி
அடிமையென்று' என்றனர். நெடியவன் றேட நீண்டவன், அடிமையென்று
அடிமை கொண்ட என்பவற்றின் நயம் ஓர்ந்துணர்க. தன் சாரியை. (1)