பக்கம் எண் :

விறகுவிற்ற படலம்369



மன்றலந் தெரியன் மார்பன் வரகுணன் செங்கோ லோச்சிப்
பொன்றலங் காவ லானிற் பொலியுநா ளேம நாதன்
என்றொரு விறல்யாழ்ப் பாணன் வடபுலத் திருந்தும் போந்து
வென்றிகொள் விருதி னோடும் விஞ்சைசூழ் மதுரை சார்ந்தான்.

     (இ - ள்.) மன்றல் அம் தெரியல் மார்பன் வரகுணன் - மணம்
பொருந்திய அழகிய மாலையையணிந்த மார்பினையுடையனாகிய வரகுண
பாண்டியன், செங்கோல் ஓச்சி - செங்கோல் நடாத்தி, பொன்தலம்
காவலானில் பொலியுநாள் - பொன்னுலகினைப் புரக்குந் தேவேந்திரனைப்
போல விளங்கு நாளில், ஏமநாதன் என்று ஒரு விறல் யாழ்ப்பாணன் -
ஏமநாதன் என்னும் ஒரு வெற்றியையுடைய யாழ்ப்பாணன். வடபுலத்திருந்தும்
போந்து - வடநாட்டினின்றும் வந்து; வென்றி கொள் விருதினோடும் -
வெற்றியினாற் கொள்ளப்பட்ட விருதுகளோடும், விஞ்சை சூழ் மதுரை
சார்ந்தான் - கல்வி மிக்க மதுரையை அடைந்தான்.

     யாழ்ப்பாணன் - யாழாற் பாடும் பாணன். முன் பலரை இசையில்
வென்று விருதுகள் பெற்றவனென்பது. 'வென்றிகொள் விருதினோடும்'
என்பதனாற் பெறப்பட்டது. விருதினோடும் போந்து மதுரை சார்ந்தான் என்க.
(2)

பூழியர் பெருமான் கோயில் புகுந்துவேத் தவையத் தெய்திச்
சூழிமால் யானை யானைத் தொழுதுபல் புகழ்கொண் டாடி
ஏழிசை மழலை வீணை யிடந்தழீஇச் சுருதி கூட்டி
வாழியின் னிசைத்தேன் மன்ன னஞ்செவி வழியப் பெய்தான்.

(இ - ள்.) பூழியர் பெருமான் கோயில் புகுந்து - பாண்டியர் தலைவனாகிய
வரகுண தேவன் மாளிகையிற் சென்று, வேத்து அவையத்து எய்தி -
அரசவையை அடைந்து, சூழிமால் யானை யானைத் தொழுது - முக
படாமணிந்த பெரிய யானைகளையுடைய வேந்தனை வணங்கி, பல்புகழ்
கொண்டாடி - பல புகழ்களையும் பாராட்டி, ஏழ் இசை மழலை வீணை -
ஏழு இசைகளையுடைய மழலை போலும் இனிமையைப் பயக்கும் யாழினை,
இடம் தழீஇச் சுருதி கூட்டி - இடப்பக்கங் கொண்டு சுருதி கூட்டி, இன்
இசைத்தேன் - இனிய இசையாகிய தேனை, மன்னன் அஞ்செவி வழியப்
பெய்தான் - அரசனது அகஞ் செவி நிரம்பி வழியுமாறு சொரிந்தான். தழீஇ,
சொல்லிசை யளபெடை. சுருதி கூட்டி - பண்ணமைத்து. வாழி, மங்கலப்
பொருட்டாய அசைச்சொல். அஞ்செவி - அகஞ்செவி. (3)

முகையுடைந் தவிழ்ந்த மாலை முடித்தலை துளக்கித் தூசு
பகலவிர் மணிப்பூ ணல்கிப் பல்லுணாக் கருவி நல்கி
அகன்மனை வேறு காட்டி யரசர்கோன் வரிசை செய்ய
இகலறு களிப்பி னோடு மிசைவல்லா னில்லிற் புக்கான்.