பக்கம் எண் :

370திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) முகை உடைந்து அவிழ்ந்த மாலை முடித்தலை துளக்கி -
அரும்பின் முறுக்குடைந்து விரிந்த மலராலாகிய மாலையையணிந்த
முடியினையுடைய தலையை அசைத்து, தூசு - பல ஆடைகளையும், பகல்
அவிர் மணிப்பூண் நல்கி - சூரியன் போல விளங்கும் மணிக்கலன்களையும்
கொடுத்து, பல் உணாகருவி நல்கி - உணவுக்கு வேண்டிய பல
பொருள்களையும் அளித்து, அகன்மனை வேறு காட்டி - அகன்ற இல்லம்
வேறு காண்பித்து, அரசர் கோன் வரிசை செய்ய - மன்னர் மன்னனாகிய
வரகுண பாண்டியன் சிறப்புச் செய்ய, இகல் அறு களிப்பினோடும் -
பகையற்ற மகிழ்ச்சியோடும், இசை வல்லான் இல்லில் புக்கான் - இசையில்
வல்ல ஏமநாதன் தனக்கு அமைத்த வீட்டிற் சென்றான்.

     கருவி - உபகரணம். அரசன் வரிசை செய்தமையால் இங்கும் தன்னை
வெல்லவல்லார் இலரெனக் கருதி மகிழ்ந்தனனென்பார் 'இகலறு
களிப்பினோடும்' என்றார். (4)

மீனவன் வரிசை பெற்ற செருக்கினும் விருதி னானும்
மானமேல் கொண்டு தன்னோ டின்னிசை பாட வல்ல
தானயாழ்ப் புலவர் வேறிங் கில்லெனத் தருக்குஞ் செய்தி
கோனறிந் துழையர்க் கூவிப்பத்திரற் கொணர்தி ரென்றான்.

     (இ - ள்.) மீனவன் வரிசை பெற்ற செருக்கினும் - பாண்டியன் செய்த
வரிசைகளைப் பெற்ற செருக்கினாலும், விருதினாலும் - (முன் பல
அரசர்களிடம் பெற்ற) விருதினாலும், மானம் மேல் கொண்டு - பெருமை
மிக்கு, தன்னோடு இன் இசை பாடவல்ல - தன்னுடன் இனிய இசை
பாடுவதற்கு வல்ல, தான யாழ்ப்புலவர் - தானமமைந்த யாழ்ப் புலவர், இங்கு
வேறு இல் எனத் தருக்கும் செய்தி - இங்கு வேறு ஒருவருமில்லை என்று
கருதி இறுமாக்குஞ் செய்தியை, கோன் அறிந்து - பாண்டி மன்னன் அறிந்து,
உழையர்க் கூவி - ஏவலாளரை விளித்து, பத்திரன் கொணர்திர் என்றான் -
நமது பாணபத்திரனை அழைத்து வாருங்கள் என்று ஏவினான்.

     தானம். இசை தோன்றுமிடம். தருக்கினான் அங்ஙனந் தருக்குஞ்
செய்தியை என விரித்துரைக்க. உழையர் - ஒற்றர். (5)

உழையரால் விடுக்கப் பட்ட பத்திர னுவரி வென்றோன்
கழல்பணிந் தருகு நிற்பக் கௌரிய னோக்கிப் பாணி
பழகிசை வல்லா னோடும் பாடுதி கொல்லோ வென்ன
மழலையா ழிடந்தோ ளிட்ட பாணர்கோன் வணங்கிச்                                    சொல்வான்.

     (இ - ள்.) உழையரால் விடுக்கப்பட்ட பத்திரன் - அவ்வொற்றரால் அழைத்து வரப்பட்ட பாணபத்திரன், உவரி வென்றோன் கழல் பணிந்து - கடலை வென்ற பாண்டியன் அடிகளை வணங்கி, அருகு நிற்ப - பக்கத்தில் நிற்க, கௌரியன் நோக்கி - பாண்டியன் அவனைப் பார்த்து, பாணி பழகு இசை வல்லானோடும் - பாடுதல் பயின்ற இசை வல்லனாகிய ஏம