பக்கம் எண் :

திருமுகங்கொடுத்த படலம்403



நாற்பத்திரண்டாவது திருமுகங் கொடுத்த படலம்

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
முன்னவன் மதுரை மூதூர் முழுமுத லிசைவ லானை
இன்னிசை பாடி வென்ற தின்றுரை செய்தே* மந்தத்
தென்னவன் சேரன் மாடே திருமுகங் கொடுத்துப் பாணர்
மன்னவன் றனக்குச் செம்பொன் வழங்கிய வழக்கஞ்                                      சொல்வாம்.

     (இ - ள்.) முன்னவன் - (திருமால் முதலியோர்க்கு) முன்னவனும்,
மதுரைமூதூர் முழு முதல் - மதுரை என்னும் பழம் பதியில் எழுந்தருளிய
முழுமுதற் பொருளுமாகிய சோமசுந்தரக் கடவுள், இசை வலானை -
இசையில் வல்ல ஏமநாதனை, இன் இசை பாடி வென்றது - இனிய இசை
பாடி வென்ற திருவிளையாடலை, இன்று உரை செய்தேம் - இப்பொழுது
கூறினேம்; அந்தத் தென்னவன் - (இனி) அவ்விறைவனே; சேரன் மாடே
திருமுகம் கொடுத்து - சேரமான் பெருமாளிடந் திருமுகங் கொடுப்பித்து,
பாணர் மன்னவன் தனக்கு - பாணர் வேந்தனாகிய பத்திரனுக்கு,
செம்பொன் வழங்கிய வழக்கம் சொல்வாம் - செம்பொன் அளித்த
திருவிளையாடலைக் கூறுவோம்.

     முன்னவனென்ற கருத்தை,

"மாலு நான்முகத் தொருவன் யாரினும்
முன்ன வெம்பிரான் வருக" ."

என்னும் திருவாசகத்தால் அறிக

     என்னுரை செய்தேம் என்பது பாடமாயின் யாதினையறிந்து கூறினேம்
என்றுரைத்துக் கொள்க. சுந்தர பாண்டியனாக வந்தமையின் ‘அந்தத்
தென்னவன்’ என்றார். வழக்கம் - வரலாறு. (1)

இனிமதி யெமக்கீ தென்னா யாழ்வல்லோ னன்று தொட்டுப்
பனிமதி மருமான் கோயிற் பாணிசைக் கிழமை நீத்துக்
குனிமதி மிலைந்த நாதன் கோயின்முப் போது மெய்திக்
கனிமதி யன்பிற் பாடுங் கடப்படு நியமம் பூண்டான்.

     (இ - ள்.) இனி எமக்கு மதி ஈது என்னா - இனி எமக்கு அறிவாவது
இதுவே என்று கருதி, யாழ் வல்லோன் - யாழில் வல்ல பாணபத்திரன்,
அன்று தொட்டு - அந்நாள் முதல், பனிமதி மருமான் கோயில் பாண் இசைக்
கிழமை நீத்து - குளிர்ந்த சந்திரன் மரபினனாகிய வரகுண பாண்டியனது
    


 (பா - ம்.) * என்னுரை செய்தேம்.