பக்கம் எண் :

யானையெய்த படலம்41



இருபத்திரண்டாவது யானையெய்த படலம்

[கலிவிருத்தம்]
கட்டவிழ் கடுக்கையர் கலானை கழைதின்ன
இட்டதிது பஞ்சவ னிடத்தமண ரேவி
விட்டமத யானைவிழ மேவலர் புரத்தைச்
சுட்டகணை விட்டுயிர் தொலைத்தமுறை சொல்வாம்.

     (இ - ள்.) இது - இத் திருவிளையாடல், கட்டு அவிழ் கடுக்கையர்
கல் ஆனை கழை தின்ன இட்டது - முறுக் கவிழ்ந்த கொன்றைமலர்
மாலையை யணிந்த சித்த மூர்த்திகள் கல்லானையானது கரும்பினைத்
தின்னுமாறு அளித்ததாகும்; பஞ்சவன் இடத்து அமணர் ஏவி விட்ட -
விக்கிரம பாண்டியன்மேல் சமணர்கள் ஏவிய, மதயானை விழ -
மதத்தையுடைய யானையானது விழுமாறு, மேவலர் புரத்தைச் சுட்ட
கணை விட்டு - பகைவரின் திரிபுரத்தை நீறாக்கிய அம்பை விட்டு,
உயிர் தொலைத்த முறை சொல்வாம் - அதன் உயிரினைப் போக்கிய
திருவிளையாடலை இனிக் கூறுவாம்.

     கல்லானை என்பதில் லகரந் தொக்கது. இது வென்றது மேலே
கூறியதனை. (1)

விக்கிரம பாண்டியன் வெலற்கரிய செங்கோல்
திக்குநில னுந்திறைகொள் செல்வநிறை வெய்த
அக்கிரம வெங்கலி யரும்பகை யொதுங்கச்
சக்கர முருட்டியிடர் சாய்த்துமுறை செய்வான்.

     (இ - ள்.) வெலற்கு அரிய செங்கோல் - பிறரால் வெல்லுதற்கரிய
செங்கோலையுடைய, விக்கிரம பாண்டியன் - விக்கிரம வழுதி யானவன்,
திக்கும் நிலனும் திறைகொள் செல்வம் நிறைவு எய்த - எட்டுத் திக்கிலும்
புவி முழுதிலும் திறையாகக் கொண்ட செல்வமானது நிறைவினைப்
பொருந்தவும், அக்கிரம வெங்கலி அரும்பகை ஒதுங்க - கொடிய
கலியாகிய அரிய பகையானது ஓடவும், சக்கரம் உருட்டி - தனது
ஆணையாகிய திகிரியைச் செலுத்தி, இடர் சாய்த்து முறை செய்வான் -
குடிகளின் துன்பத்தைப் போக்கி முறை செய்வானாயினன்.

     செங்கோலையுடைய பாண்டியன் எனக் கூட்டுக. திக்கு, நிலன் என்பன
ஆகு பெயர்கள், அக்கிரமம் - நெறியின்மை. அக்கிரமமும் வெம்மையும்
கலிக்கு அடை. கலி - வறுமையும் தீமையும் முதலியன. நீதி திறம்புதலாகிய
கலி என்பாருமுளர். (2)