பக்கம் எண் :

திருமுகங்கொடுத்த படலம்417



வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த                                    நிதியெல்லாம்
இந்து மருமா னகருள்ளார் யாரு மறிய யாவர்க்கும்
முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறைநல்கிச்
சந்த யாழி னிசைப்பாணர் தரும மனையான் வைகினான்.

     (இ - ள்.) சந்தம் யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் -
சந்தமமைந்த யாழின் இசையில் வல்ல பாணர்கள் செய்த அறமே யனைய
பத்திரன், வந்து மதுரைப் பெருமானை வணங்கி - வந்து மதுரை
நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை வணங்கி, கொணர்ந்த நிதி எல்லாம் -
கொண்டுவந்த பொருள் அனைத்தையும், இந்து மருமான் நகருள்ளார் யாரும்
அறிய - சந்திரன் மரபினனாகிய பாண்டியனது நகரில் உள்ளாரனைவரும்
அறிய, முந்தை வேதமுதல்வர்க்கும் புலவோர் தமக்கும் - முற்பட்ட
மறையினையுணர்ந்த அந்தணர்க்கும் புலவர்களுக்கும், யாவர்க்கும் -
இரவலர் முதலிய ஏனை யாவர்க்கும், முறைநல்கி - வரிசையால் அளித்து,
வைகினான் - வாழ்ந்து வந்தனன்.

     மருமானும் நகருள்ளாரும் என்றுமாம். யாருமறிய என்பதற்கு யாவரும்
அறஞ் செய்யு முறைமையை அறிய என்றும் கருத்துக் கொள்க. (30)

                    ஆகச் செய்யுள் - 2130