பக்கம் எண் :

418திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



நாற்பத்து மூன்றாவது பலகையிட்ட படலம்

[கொச்சகக்கலிப்பா]
கருந்துழாய் முகிலொருபாற் கலந்தவர்*பத் திரற்குநிதி
திருந்துதா ருதியனிடைத் திருமுகமீந் தளித்ததிது
வருந்தியா ழவனிசைப்ப மழைதூங்கு நள்ளிரவில்
இருந்துபா டெனப்பலகை யிட்டதூஉ மினிப்பகர்வாம்.

     (இ - ள்.) கருந்துழாய் முகில் - கரிய துழாய் மாலையை யணிந்த
முகில்போன்ற திருமால், ஒருபால் கலந்தவர் - ஒரு பக்கத்திற்
பொருந்தப்பெற்ற இறைவர், பத்திரற்கு - பாணபத்திரனுக்கு, திருந்துதார்
உதியனிடை - திருத்தமாகிய மாலையை யணிந்த சேரமானிடம், திரு முகம்
ஈந்து - திருமுகங் கொடுப்பித்து, நிதி அளித்தது இது - பொருள்
அளித்தருளிய திருவிளையாடல் இது; அவன் - அப்பாணபத்திரன், மழை
தூங்கும் நள்இரவில் வருந்தி யாழ் இசைப்ப - மழைபொழியும் நடு இரவில்
வருந்தி யாழ் இசைபாட, இருந்து பாடு என - இதன்மீது இருந்து
பாடுகவென்று, பலகை இட்டதூஉம் - (அப்பெருமானார்) பலகையிட்டருளிய
திருவிளையாடலையும், இனிப் பகர்வாம் - இனிக் கூறுவாம்.

     இறைவனது ஒரு கூற்றிலே திருமால் இருத்தலை,

"இடமால் வலந்தான்"

என்னும் பொன்வண்ணத்தந்தாதியிற் காண்க.

"அரனாரண னாமம் ஆன்விடைபுள் ளூர்தி
உரை நூல் மறையுறையுங் கோயில் - வரைநீர்
கரும மழப்பளிப்புக் கையதுவேல் நேமி
உருவமெரி கார்மேனி யொன்று"

என்னும் முதலாழ்வார் பாட்டாலும் பெறப்படுகின்றது. அவன் யாழ் இசைப்ப என இயையும். (1)

முன்புடைய நாயகனை முப்போதும் புகுந்திறைஞ்சி
இன்புறுமே ழிசைக்கிழவ னிருநிதிய மருளியபின்
அன்புசிறந் தரையிரவு மடைந்துபணிந் தடல்விடையின்
பின்புறநின் றேழிசையும் பாடிவரும் பேறடைவான்.

     (பா - ம்.) * கரந்தவர்.