பக்கம் எண் :

450திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



[அறுசீரடி யாசிரி விருத்தம்]
மன்னவர் வலிக ளெல்லாந் தெய்வத்தின் வலிமுன் னில்லா
அன்னமா தெய்வஞ் செய்யும் வலியெலா மரண்மூன் றட்ட
முன்னவன் வலிமுன் னில்லா வெனப்பலர் மொழவ தெல்லாம்
இன்னபாண் மகளிற் காணப் பட்டதென் றிறும்பூ தெய்தா.

     (இ - ள்.) மன்னவர் வலிகள் எல்லாம் - அரசருடைய வலிமை
யெல்லாம், தெய்வத்தின் வலிமுன் நில்லா - தெய்வத்தின் வலிமை முன்
நில்லா; அன்னமா தெய்வம் செய்யும் வலிஎலாம் - அப்பெரிய தெய்வங்கள்
செய்யும் வலிமுழுவதும், அரண்மூன்று அட்ட முன்னவன் வலிமுன் நில்லா -
மூன்று புரங்களையும் அழித்த இறைவன் வலிமுன் நில்லாவாம்; எனப் பலர்
மொழிவது எல்லாம் - என்று ஆன்றோர் பலரும் கூறுவதெல்லாம்,
இன்னபாண்மகளின் காணப்பட்டது என்று - இந்தப் பாடினி வாயிலாகக்
காணப்பட்டதென்று, இறும்பூது எய்தா - வியப்புற்று.

     மொழிவதெல்லாம் : ஒருமைப் பன்மை மயக்கம். பாண்மகளின் -
பாடினி வாயிலால். (43)

மின்னியல் சடையி னானை விடைகொடு வலஞ்செய் தேகி
இன்னிய மியக்கஞ் செய்ய வெழில்கொடன் கோயி வெய்தித்
தொன்னிதி பெற்றான் போலச் சுகுணபாண் டியனைப் பெற்று
மன்னிய மகிழ்ச்சி வீங்க வைகினா னிராச ராசன்.

     (இ - ள்.) இராசராசன் - இராசராச பாண்டியன், மி்ன் இயல்
சடையினானை - மின்போன்ற சடையையுடைய சோமசுந்தரக் கடவுளை,
வலஞ்செய்து - வலம்வந்து, விடைகொடு ஏகி - அப்பெருமானிடம்
விடைபெற்று சென்று, இன் இயம் இயக்கம் செய்ய - இனிய வாத்தியங்கள்
ஒலிக்க, எழில்கொள் தன் கோயில் எய்தி - அழகிய தனது மாளிகையை
அடைந்து, தொல்நிதி பெற்றான்போல - சேமநிதிபெற்ற வனைப்போல,
சுகுண பாண்டியனைப் பெற்று - சுகுண பாண்டியன் என்னும் மைத்னைப்
பெற்று, மன்னிய மகிழ்ச்சி வீங்க வைகினான் - நிலைபெற்ற மகிழ்ச்சி மிக
இருந்தனன்.

     இயக்கஞ் செய்ய - ஒலிக்க, (44)

                     ஆகச் செய்யுள் - 2192