பக்கம் எண் :

452திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



மாடமூதூர் - ஒரு செல்வமிக்க பழைய அழகிய மாடங்கள் நிறைந்த பெரிய
ஊர், குரு விருந்த துறை என உளது - குருவிருந்ததுறை என்னும் பெயருடன்
உள்ளது.

     இமையோர் முறையிட்டமையை,

"நஞ்சமஞ்சி, ஆவெந்தாயென் றவிதாவிடு நம்மவரவரே"

எனத் திருவாதவூரடிகள் அருளிச் செய்தலுங் காண்க. சான்றாய் -
சிவபெருமானே பரமபதி என்பதற்குச் சான்றாய். (2)

தருநாத னாதி வானோர் தங்குரு விருந்து நோற்பக்
குருநாத னெனப்பேர் பெற்றுக் கோதிலா வரந்தந் தேற்றில்
வருநாதன் சித்தி ரத்தேர் வலவனா ருடனே கஞ்சத்
திருநாதன் பரவ வைகி யிருக்குமச் சிறந்த பூரில்.

     (இ - ள்.) தருநாதன் ஆதிவானோர்தம் குரு - கற்பகத்தருவின்
தலைவனாகிய இந்திரன் முதலிய தேவர்களின் குரவனாகிய வியாழன்,
இருந்து நோற்ப - தங்கியிருந்து தவம் புரிதலால், குருநாதன் எனப் பேர்
பெற்று - குருநாதன் என்னுந் திருநாமம் பெற்று, கோது இலா வரம் தந்து
- குற்றமில்லாத வரங்களை அருளி, ஏற்றில் வருநாதன் - இடபவூர்தியில்
வரும் இறைவன், சித்திரத் தேர்வலவனா ருடனே - விசித்திரமாகிய தமது
தேரைச் செலுத்தும் பாகனாகிய பிரமனுடன், கஞ்சத் திருநாதன் பரவ -
தாமரைமலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கு நாயகனாகிய திருமால் போற்ற,
வைகி இருக்கும் - எழுந்தருளியிருப்பன்; அச்சிறந்த ஊரில் - அத்தகைய
சிறந்த பதியிலே.

     நோற்றல் - சிவபிரானைக் குறித்துத் தவஞ் செய்தல். சித்திரத்தேர் -
திரிபுரங்களை அழித்தற்கு எழுந்தருளுதற் பொருட்டுத் தேவர்களால்
இயற்றப்பட்ட தேர். கஞ்சத்திரு - இலக்குமி. (3)

சுகலனென் றொருவே ளாள னவன்மனை சுகலை யென்பாள்
இகலருங் கற்பி னாள்பன் னிருமகப் பெற்றாள் செல்வப்
புகலருஞ் செருக்கா லன்ன புதல்வரைக் கடியா ராகி
அகலருங் களிப்பு மீதூ ரன்பினால் வளர்க்கு நாளில்.

     (இ - ள்.) சுகலன் என்று ஒரு வேளாளன் - சுகலன் எனப் பெயரிய
ஒரு வேளாளன் (உளன்); அவன்மனை சுகலை என்பாள் - அவன் மனைவி
சுகலை என்று சொல்லப்படுவாள்; இகல் அருங்கற்பினாள் - மாறுபாடில்லாத
கற்பினையுடைய அவள், பன்னிரு மகப்பெற்றாள் - பன்னிரண்டு
பிள்ளைகளைப் பெற்றாள்; செல்வப் புகல் அருஞ்செருக்கால் - செல்வத்
தாலாகிய சொல்லுதற்கரிய செருக்கினால், அன்ன புதல்வரைக் கடியாராகி
அந்தப் பிள்ளைகளைக் குற்றங்கண்டவழி ஒறுக்காதவர்களாய், அகல் அருங்
களிப்பு மீதூர் அன்பினால் - நீங்காத களிப்பு மிக்க அன்போடு, வளர்க்கு
நாளில் - வளர்த்துவரும் பொழுது.