பக்கம் எண் :

468திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கட்புனல் வெப்பமுற் றுதிர்தலின் விளங்கின் திரிசிந்தும் நெய்யை உவமை கூறினார். கன்னியாகிய தான் புலம்பின் பிறர் அலர் தூற்றுவரோ என்னும் நாணத்தால் வாய்விட்டுப் புலம்பா தொழிவான் என்பார் 'நாணெடுந்தளைப்படும்' என்றார். தொட்டாள் - தீண்டப்பட்டாள். சோரும், உகும், தேயும் என்னும் சினைவினைகள் முதன்மேல் நின்றன. (17) வணங்கில்செல் வந்தழீஇப் பிறந்தநா டொட்டொரு வைகலும் அணங்கெனக் கனவிலுங் கண்டிலா ளன்பன்மே லன்பென இணங்குதன் னுருவமாய் நிறைவரம் பிற்றென விருந்தொர்பெண் அணங்குவாய் விட்டழு தாலெனப் புலம்பலுற் றாளரோ. (இ - ள்.) வணங்கு இல் செல்வம் தழீஇ - குறைதலில்லாத செல்வத்தைப் பொருந்தி, பிறந்தநாள் தொட்டு - பிறந்தநாள் முதலாக, ஒருவைகலும் - ஒருநாளேனும், அணங்கு எனக் கனவிலுங் கண்டிலாள் - துன்பமென்று கனவிலுங் கண்டறியாத அம்மாது, அன்பன்மேல் இணங்கு அன்பு - அன்பன் மேற் பொருந்திய அன்பானது, தன் உருவமாய் நிறைவரம்பிற்று என - தன் வடிவமாய் நிறைந்த அளவினை யுடையதாயிற்று என்று கண்டோர் கூற, ஓர் பெண் அணங்கு இருந்து வாய்விட்டு அழுதால் அன - ஒரு பெண் தெய்வம் இருந்து வாய்விட்டு அழுதாற்போல, புலம்பல் உற்றாள் - புலம்பத் தொடங்கினாள். வணங்கு, முதனிலைத் தொழிற் பெயர்; வணங்கல் குறைதல். அன்பென என்பதிலுள்ள என அசை, ஓர், விகாரம், அரோ, அசை. (18) [அறுசீரடியாசிரிய விருத்தம்.] என்னா யகனேயோ வென்னிருகண் மணியேயோ வென்னை யீன்றான் தன்னாவி யன்னதனி மருகாவோ முருகாவோ தாரார் முல்லை மன்னாவோ வணிகர்குல மணியேயோ விடவாவின் வாய்ப்பட் டாயோ உன்னகா நிழலான வென்னைவிடுத் தெவ்வண்ண மொளிப்ப தேயோ. (இ - ள்.) என் நாயகனேயோ - எனது நாயகனே, என் இருகண் மணியேயோ - எனது இரண்டு கண்களின் மணியே, என்னை ஈன்றான் தன் ஆவி அன்னதனி மருகாவோ - என்னைப் பெற்ற தந்தையினது உயிர்போன்ற ஒப்பற்ற மருகனே, முருகாவோ - இளமைப் பருவமுடையவனே, முல்லைத்தார் ஆர்மன்னாவோ - முல்லை மாலையை யணிந்த மன்னனே, வணிகர்குல மணியேயோ - வணிகர் மரபிற்கு ஓர் மணி போல்வானே, விட அரவின் வாய்ப்பட்டாயோ - நீ நஞ்சினையுடைய பாம்பின்வாய்ப் பட்டனையோ, உன் ஆக நிழலான என்னை விடுத்து - உனது உடலின் நிழலாகிய என்னைவிட்டு, ஒளிப்பது எவ்வண்ணம் - நீ மறைவது எங்ஙனம்? தன் தந்தையால் கணவனாக நிச்சயிக்கப்பட்டவன் ஆதலால் 'என்னாயகனே' என்றாள். நிழல்போன்ற என்னை விடுத்து ஒளிப்பது பெரியதோர் வியப்பு என்பாள் 'உன்னாக நிழலான என்னைவிடுத் தெவ்வண்ண மொளிப்பது' என்றாள். ஓகாரங்கள் புலம்பலில் வந்தன. (19) பொன்னாட்டின் மடவாரைப் புணர்வதற்கோ நம்மளகா புரத்து வேந்தன் நன்னாட்டின் மடவாரை மணப்பதற்கோ வுனைக்கடித்த நாகர் வேந்தன் தன்னாட்டின் மடவாரைத் தழுவுதற்கோ வென்னாவித் தலைவா வென்னை இந்நாட்டி லிருத்தியென வஞ்சித்துப் போயினவா றென்னே யென்னே.