பக்கம் எண் :

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்469



அகங்காரம், புத்தி, சித்தம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கும் ஆகிய
ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும்; காலம், நியதி, கலை, வித்தை,
அராகம், புருடன், மாயை ஆகிய வித்தியா தத்துவங்கள் ஏழும்; சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் ஆகிய சுத்த தத்துவங்கள் ஐந்தும் ஆம்.
ஆறாறு என்பதற்குச் சுத்த தத்துவம் ஐந்து மொழிந்த முப்பத்தொரு
தத்துவங்களோடு பூத குணங்களாகிய சத்தம் முதலிய புலன்கள் ஐந்தையும்
கூட்டியுரைத்தலுமாம். போகத்தில் விருப்பினையுண்டாக்கி மயக்குதலின்
'இனித்த' என்றார். தனித்த வென்றது பாசங்களின் நீங்கிய நிலைமையைக்
குறிப்பிட்டவாறு. (27)

குனிவி லாதிரைத் தினந்தொடுத்
     தெதிர்வரு கொடுவிலா திரையெல்லை
புனித வாடக முளரிதோய்ந்
     தத்தனிப் பொதுநடந் தரிசித்தங்
கினித மர்ந்துநூற் றெண்மடங்
     கைந்தெழுத் தெண்ணியிந்* நிலைநிற்குங்
கனியு மன்பினா ரெண்ணியாங்
     கெய்துவர் கருதிய வரமெல்லாம்.

     (இ - ள்.) குனிவில் ஆதிரைத் தினம் தொடுத்து - வளைந்த
தனுசாகிய மார்கழித் திங்கள் ஆதிரை நாள் தொட்டு, எதிர்வரு கொடுவில்
ஆதிரை எல்லை - எதிர் வருகின்ற மார்கழித் திருவாதிரை காறும், புனித
ஆடக முளரி தோய்ந்து - தூய்மையுடைய பொற்றாமரையில் நீராடி,
அத்தனிப் பொதுநடம் தரிசித்து - அவ்வொப்பற்ற வெள்ளியம்பலத்
திருக்கூத்தைத் தரிசித்து, அங்கு இனிது அமர்ந்து - அங்கே இனிது தங்கி,
நூற்றெண்மடங்கு ஐந்து எழுத்து எண்ணி - நூற்றெட்டு முறை
திருவைந்தெழுத்தை உச்சரித்து, இந்நிலை நிற்கும் கனியும் அன்பினார் -
இந்நிலையில் வழுவாது நிற்கும் முதிர்ந்த அன்பினையுடையவர், கருதிய வரம்
எல்லாம் எண்ணி யாங்கு எய்துவர் - எண்ணிய வரங்களையெல்லாம்
எண்ணியபடியே அடைவர் எ - று.

     வில் - தனுசிராசி; இவ்விராசியில் ஆதித்தன் நிற்கும் மார்கழித்
திங்களை வில் என்றார்; வில் என்னும் பெயருக்கேற்பக் குனி, கொடு
என்னும் அடைகள் கொடுக்கப்பட்டன; குனிவில் : வினைத் தொகை;
கொடுவில் : பண்புத்தொகை. இவ்விரு செய்யுளும் ஆசிரியர் கூற்று;
பாடபேதப்படி சிவபிரான் கூற்றாகும். (28)

ஆகச் செய்யுள் - 825.



     (பா - ம்.) *இனிது வைகியா யிரத்தெட்டம் மந்திரமெண்ணி.