பக்கம் எண் :

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்473



     (இ - ள்.) என்ற போது - என்று கூறியபோது, இறை எம்பிரான் -
சுந்தர பாண்டியனாகிய எம் பெருமான், தேவியார் இடத்தில் ஒன்றும்
அன்பினால் - பிராட்டியாரிடத்தில் பொருந்திய அன்பினாலே, ஒரு
விளையாடலை நினைத்தோ - ஒரு திருவிளையாடலைக் கருதியோ (அன்றி),
தன் தனிக் குடைப்பாரிடத் தலைவனது ஆற்றல் - தனது ஒப்பற்ற குடையைத்
தாங்கி வரும் பூதகணத் தலைவனாகிய குண்டோதரனது வன்மையை, அன்று
யாவரும் அறிந்திடக் காட்டவோ - அப்பொழுது யாவரும் அறியுமாறு
காட்டக் கருதியோ, அறியேம் - (யாம்) அறியகில்லேம் எ - று.

     அறியேம் என்றது பின் நிகழச் செய்ததன் காரணத்தை. அன்றியெனப்
பிரித்து நினைத்தோவென்பதனுடன் இயைத் துரைத்தலுமாம். (7)

சிறிது வாணகை செய்துமூ வேந்தரிற் சிறந்த
மறுவின் மீனவ னரும்பெறன் மகளுனக் கரிதிற்
பெறுவ தேதுவான் றருவுநின் பணிசெயப் பெற்றிங்
குறைவ தேற்பிறர் திருவெலா முன்னதே யன்றோ.

     (இ - ள்.) சிறிதுவாள் நகை செய்து - சிறிது ஒள்ளிய புன் முறுவல்
செய்து, மூவேந்தரில் சிறந்த - மூவரசருள் மேம்பட்ட, மறு இல் மீனவன் -
குற்றமற்ற மலயத்துவச பாண்டியனுக்கு, அரும் பெறல் மகள் - அரும் பெரும்
புதல்வியாகிய, உனக்கு அரிதில் பெறுவது ஏது - நினக்கு அரிதிற்பெறும்
பொருள் யாது, வான் தருவும் நின் பணிசெயப் பெற்று இங்கு உறைவதேல் -
கற்பகத் தருவும் நினது பணி செய்யும் பேற்றினைப் பெற்று இங்கு
இருப்பதாயின், பிறர் திருவெலாம் உன்னதே அன்றோ - ஏனையோர்
செல்வமெல்லாம் உன்னுடையதேயல்லவா எ - று.

     மூவேந்தர் - சேர பாண்டிய சோழர். சேர சோழரினும் பாண்டியன்
சிறந்தவனென்றார்; பாண்டியர் பிறரினும் மலையத்துவசன்
மேம்பட்டவனென்பார் 'மூவேந்தரிற் சிறந்த' என்றாரெனலுமாம். அரும் பெறல்
என்பதற்குப் பெறாது பெற்ற என்றுரைப்பாருமுளர். தருவும் நின் பணி செய்
துறைவதாயின் பிறர் திருவெலாம் நின்னுடையவெனல் கூற வேண்டா
என்றவாறு; விரும்பியவெல்லாந் தரும் கற்பகத்தரு பணி செய்தலின் பிறர்
செல்வமெல்லாம் வேண்டிடின் அஃதளிக்கு மென்னுங் கருத்தாற்
கூறியதூஉமாம். உன்னதே : னகரம் விரித்தல்; ஏ : தேற்றம்;
பன்மையிலொருமை வந்தது. (8)

அளவி லாதநின் செல்வத்தின் பெருக்கைநா மறிய
விளைவு செய்தனை போலுநின் விருந்துணப் பசியாற்
களைய டைந்தவ ராகி*நங் கணத்தினுட் காணேந்
தளவ மூரலா யாஞ்செயத் தக்கதே தென்றான்.

     (இ - ள்.) தளவ மூரலாய் - முல்லையரும்பு போலும் பல் வரிசையை
யுடையாய், அளவு இலாத நின் செல்வத்தின் பெருக்கை - அளவிலாத நினது
செல்வத்தின் மிகுதியை, நாம் அறிய விளைவு செய்தனை போலும் - நாம்


     (பா - ம்.) * களையடைந்தவராக.