பக்கம் எண் :

484திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



"ஆக்கமுங் கேடு மதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு"
 
"வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்"

என்னும் திருக்குறட் பாக்களின் பொருளைத் தழுவியுள்ளது. (14)

பழையே மிறையுட் கொளப்பட்ட *மென் றேமாப் பெய்தார்
உழையேவல் செய்யுஞ் சிறார்போல வொதுங்கி வேந்தன்
விழைவே ததனை விடம்போல வெறுத்து வெஃகார்
அழல்போ லணுகா ரகலார்நிழ லன்ன நீரார்.

     (இ - ள்.) நிழல் அன்ன நீரார் - அரசனது உடல் நிழல் போன்று
விடாது நிற்கும் அவ்வமைச்சர், பழையேம் - நாம் பழைமை உடையேம்,
இறை உட்கொள்ளப்பட்டம் என்று ஏமாப்பு எய்தார் - அரசனால் நன்கு
மதிக்கப்பட்டேம் என்று கருதிக் களிப்படையாமல், உழை ஏவல் செய்யும்
சிறார்போல ஒதுங்கி - அருகிலிருந்து ஏவியவற்றைச் செய்யுஞ் சிறுவர்களைப்
போல ஒரு சிறை ஒதுங்கி நின்று, வேந்தன் விழைவு ஏது - வேந்தனால்
விரும்பப்பட்ட பொருள் எதுவோ, அதனை வெஃகார் விடம்போல வெறுத்து
- அதனை விரும்பாது நஞ்சினை வெறுத்தல் போல வெறுத்து, அழல் போல்
அணுகார் அகலார் - அவனைத் தீயைப் போலக் கருதி நெருங்கவுமாட்டார்
நீங்கவுமாட்டார்.

     பட்டேம் என்றாவது பட்டனம் என்றாவது இருக்கற்பாலது பட்டம் என
விகாரமாயிற்று. அழல் என்றது குளிரைப் போக்குதற்குக் காயும் தீயினை. இச்
செய்யுள்
,

"பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்"
 
"கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர"்
 
"இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்"
 
"மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய வாக்கந் தரும்"
 
"அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்"

என்னும் பாக்களின் பொருளைத் தழுவி வந்தது. இவ்விரு செய்யுளிலும்
காட்டிய திருக்குறட் பாக்களுக்குப் பரிமேலழகர் கூறிய உரையும்
உணரற்பாலது. (15)


     (பா - ம்.) * இறையூழ் கொளப்பட்டம்.