பக்கம் எண் :

பன்றிக்குட்டிக்கு மந்திரிகளாக்கிய படலம்485



மறுக்குஞ் செயனீத்து நடக்கையின் வையத் தோரை
ஒறுக்கும் பொருளும் பணிகேட்கையி னொன்னா லாரைச்
செறுக்கும் பொருளுங் கவரார்விளை செல்வ மாக்கள்
இறுக்கும் பொருளே யிறைவர்க்கிவ ரீட்டுஞ் செல்வம்.

     (இ - ள்.) மறுக்கம் செயல் நீத்து நடக்கையின் - குடிகள் தாம்
மறுக்கப்பட்ட செயல்களை விலக்கி விதித்த வழி நடத்தலால், வையத்தோரை
ஒறுக்கும் பொருளும் - அவரை ஒறுத்தலான் வரும் பொருளையும், பணி
கேட்கையின் - பகைவர் தாம் ஏவிய ஏவலைக் கேட்டு ஒழுகுதலால்,
ஒன்னலாரைச் செறுக்கும் பொருளும் - அவரைச் செறுத்தலான் வரும்
பொருளையும், கவரார் - விரும்பாராய், விளை செல்வமாக்கள் இறுக்கும்
பொருளே - விளைதலாலாகிய செல்வத்தையுடைய குடிகள் அவ்விளைவில்
ஆறிலொரு கடமையாக இறுக்கும் பொருளே, இவர் இறைவற்கு ஈட்டும்
செல்வம் - இவ்வமைச்சர் தம் அரசனுக்குத் தொகுக்குஞ் செல்வமாகும்.

     ஒறுக்கும் பொருள் - தண்டமாக விதிக்கும் பொருள். ஒன்னலாரைச்
செறுக்கும் பொருள் - பகைவரை வென்று பெறும் திறைப் பொருள்.
பெரும்பான்மை பற்றி ஆறிலொன்றி விளைபொருளைக் கூறினார்; உடையா
ரின்மையின் தானே வந்துற்ற பொருளும், சுங்கப் பொருளும்
அரசர்க்குரியவெனக் கொள்க.

"உறுபொருளும் உல்கு பொருளுந்தன் னென்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்"

என்பதிலுள்ள ஒன்னார்த்தெறு பொருளுடன் குடிகளை ஒறுக்கும் பொருள்
இவர் ஈட்டும் பொருளல்ல என விலக்கினார். விளை செல்வ மாக்கள்
இறுக்கும் பொருள் என்றமையால் விளைவுகுன்றி வறுமையுற்றுக் குடிகள்
உவகையுடன் கொடுக்க வியலாவிடத்து ஆறிலொன்றாகிய கடமையும்
கொள்ளார் என்பதாயிற்று. (16)

மறத்தாம வேலான்* மனக்கொள்கைதந் நெஞ்சுள் வான
நிறத்தாடி நீழ லெனத்தோற்ற நிறுத்து மற்ற
தறத்தா றெனிலாற் றுவரன்றெனி லாக்க மாவி
இறத்தான் வரினு மனத்தானு மிழைக்க வெண்ணார்.

     (இ - ள்.) மறத்தாம வேலான் - கொலையிற் பயின்ற ஒளியினை
யுடைய வேற்படையேந்திய மன்னனது, மனக்கொள்கை - மனக் கருத்து,
தம் நெஞ்சுள் - தமது நெஞ்சின்கண், வானம் நிறத்து ஆடி நிழல் எனத்
தோற்ற - வானம் போன்றதும் ஒளியையுடைதுமாகிய கண்ணாடியில் நிழல்
போல விளங்கித் தோன்ற, நிறுத்து - அதனைச் சீர்தூக்கி, அது அறத்து
ஆறு எனில் ஆற்றுவர் - அஃது அறநெறியிற்பட்ட தாயின் செய்வர்; அன்று
எனில் - அந்நெறியிற்படாதாயின், ஆக்கம் ஆவி இற வரினும் - (அது
செய்யாவழி) தம் பொருளும் உயிரும் அழிய வருமாயினும், மனத்தானும்
இழைக்க எண்ணார் - (அக்கேடு வருதலையஞ்சி) அதனைச் செய்ய
மனத்தினாலுங் கருதார்.


     (பா - ம்.) * மறத்தான வேலான்.