பக்கம் எண் :

486திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



தனக்கென உருவமின்மையாற் கண்ணாடி வானம்போல்வதாயிற்று. ஆடியில்
அடுத்த பொருளின் நிழல் விளங்கித் தோன்றுதல் போல அரசன் மனக்
கருத்து இவர் நெஞ்சிலே தோன்றிற்று என்றார்; அகத்து நிகழ்வதனை
ஐயப்படாதுணரும் தெய்வத் தன்மை கூறியவாறு.

"அறிகொண் றறியா னெனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்"

என்னும் திருக்குறளும்,

"தம்முயிர்க் குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி நிடாதுநின் றுரைக்கும் வீரர்"

என்னும் இராமாயணச் செய்யுளும் இங்கு நோக்கற்பாலன. (17)

[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
இன்னவர் றொழுகும் பன்னிரு வோரு
     மீகையுந் தருமமும் புகழுந்
தென்னர்கோ மகற்கு வைகலும் பெருகத்
     திசையெலாம் விசயமுண் டாக்கிப்
பன்னகா பரணன் சிவபுர மடைந்து
     பரன்கண நாதருட் கலந்து
மன்னிவீற் றிருந்தார் மன்னர்மன் னவனும்
     வான்பத மடைந்துவீற் றிருந்தான்.

     (இ - ள்.) இன்னவாறு ஒழுகும் பன்னிருவோரும் - இங்ஙனம் ஒழுகும்
அமைச்சர் பன்னிருவரும், தென்னர் கோமகற்கு - பாண்டியர் பெருமகனுக்கு,
ஈகையும் தருமமும் புகழும் வைகலும் பெருக - பொருளும் அறமும் புகழும்
நாடோறும் பெருகுமாறு, திசை எலாம் விசயம் உண்டாக்கி - திசைதோறும்
வெற்றியை விளைத்து, பன்னக ஆபரணன் சிவபுரம் அடைந்து -
பாம்பணியையுடையவனாகிய இறைவனது சிவலோகத்தை அடைந்து, பரன்கண
நாதருள் கலந்து மன்னி வீற்றிருந்தார் - அவனது சிவகணங்களுட் கலந்து
நிலை பெற்று வீற்றிருந்தனர்; மன்னர் மன்னவனும் - வேந்தர் வேந்தனாகிய
இராசராச பாண்டியனும், வான்பதம் அடைந்து வீற்றிருந்தான் - இந்திர
பதவியைப் பெற்று வீற்றிருந்தான்.

     ஈகை - பொன். பொருளால் அறமும் அறத்தாற் புகழும் அவற்றால்
வெற்றியும் உண்டாதலின் அம்முறையே கூறினார். பன்னகாபரணன் : தீர்க்க
சந்தி. (18)

                       ஆகச் செய்யுள் - 2273.