பக்கம் எண் :

486திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அறுபத்தைந்தாவது அ ரு ச் ச னை ப் ப ட ல ம்

                [எழுசீரடியாசிரிய விருத்தம்.]
கன்னிதன் வதுவைக் கரிகளா யிலிங்கக் கடவுளுங் கவைக்கருங்
                                          கோட்டு
வன்னியும் படுநீர்க் கூவலும் வந்த வழியிது மதுரைநா யகனைச்
சென்னியில் வைத்த முனிவனைப் பூசை செய்துமா தவரொருங்
                                           கெய்திப்
பன்னிற மலர்ந்தூ யாலவா யானைப்* பரவிய பரிசது பகர்வாம்.

     (இ - ள்.) கன்னிதன் வதுவைக் கரிகளாய் - வணிக மங்கையின்
மணச்சான்றுகளாய், இலிங்கக் கடவுளும் - சிவலிங்க மூர்த்தியும், கருங்
கவைக் கோட்டு வன்னியும் - கரிய பிளவுபட்ட கிளைகளையுடைய
வன்னிமரமும், நீர்படு கூவலும் வந்தவழி இது - நீர்ஊறுங் கிணறுமாகிய
இவை வந்த திருவிளையாடல் இது; மதுரை நாயகனைச் சென்னியில் வைத்த
முனிவனை - (இனி) சோமசுந்தரக் கடவுளை முடிக்குப் பன்னிரண்டு
அங்குலத்திற்கு மேல் வைத்துத் தியானித்த அக் குறுமுனிவனை, பூசைசெய்து
- பூசித்து, மாதவர் ஒருங்கு எய்தி - அம்மாதவர்கள் ஒருசேரச் சென்று,
ஆலவாயானை - திருவாலவாயுடைய இறைவனை, பல் நிற மலர்தூய்ப்
பரவிய பரிசது பகர்வாம் - பல நிறங்களையுடைய மலர்களைத் தூவி
வழிபட்ட தன்மையைக் கூறுவாம்.

     படுநீர் - ஆழமாகிய நீர் என்றுமாம். மேலைப் படலத்துக் கூறியதனை
அநுவதித்து ‘மதுரை நாயகனைச் சென்னியில் வைத்த முனிவனை’ என்றார்.
பரிசது, அது பகுதிப் பொருள் விகுதி. (1)

போதவா னந்தத் தனிக்கடல் பருகும் புயல்புரை முனிவனை வசிட்ட
மாதவ னாதி முனிவரு முலோபா முத்திரை தன்னொடும் வரித்துப்
போதொடு சாந்த மான்மதந் தீபம் புகைமுதற் கருவிகைக் கொண்டு
மேதகு சிறப்பா லருச்சனை செய்து பின்னுமோர் வினாவுரை செய்வார்.

     (இ - ள்.) போத ஆனந்தத் தனிக்கடல் பருகும் புயல்புரை முனிவனை
- ஞானாந்தமாகிய ஒப்பற்ற கடலைக் குடிக்கும் முகில்போன்ற அகத்திய
முனிவனை, உலோபாமுத்திரை தன்னொடும் வரித்து -
உலோபாமுத்திரையுடன் இருத்தி, வசிட்டன் ஆதி முனிவரும் - வசிட்டன்
முதலிய முனிவ ரனைவரும், போதொடு சாந்தம் மான் மதம் தீபம் புகைமுதல்
கருவி கைக்கொண்டு - மலர் சந்தனம் மான்மதம் தீபம் தூபம் முதலிய
உபகரணங்களைக் கையிற் கொண்டு, மேதகு சிறப்பால் அருச்சனை புரிந்து -
மேம்பட்ட சிறப்பினால் அருச்சித்து, பின்னும் ஓர் வினா வுரைசெய்வார் -
மீண்டும் ஒரு வினாவினை நிகழ்த்துவார்.

     அகத்தியர் கடலுண்டவராகலின், அஃதேயன்றி இக்கடலும் பருகினரென
ஒரு நயந்தோன்றக் கூறினார். உலோபாமுத்திரை - அகத்தியனாரது
மனைவியார்; மனைவி யாரையும் கூறினமையின் ‘வரித்து’ என்றார்; வரித்தல்
- அழைத்தல்; ஈண்டு அழைத்து ஆதனத் திருத்தி என்க. (2)


     (பா - ம்.) * ஆலவாயானை.