(இ
- ள்.) என்று முனி விளம்பக் கேட்டிருந்த காஞ்சன மாலை -
என்று கோதம முனி கூறக் கேட்ட பொன் மாலை, துன்று திரைக் கடல்
ஆடத் துணிவு உடைய விருப்பினளாய் - நெருங்கிய அலைகளையுடைய
கடலில் ஆடுவதற்குத் துணிந்த விருப்பத்தையுடையவளாய், தன் திரு மா
மகட்கு உரைத்தாள் - தன்னுடைய செல்வப் புதல்வியாருக்குக் கூறினாள்;
செழியர் தவக்கொழுந்து அனையாள் - பாண்டியர்களின் தவக் கொழுந்து
போல்வாராகிய பிராட்டியார், சிறிது உள்ளம் தளர்வு எய்தி - சிறிது உள்ளந்
தளர்ந்து, இறைவற்கு உரைப்பல் எனச் சென்று - இறைவனுக்கு இதனைக்
கூறுவேன் என்று கருதிப் போய் எ - று.
உள்ளந்
தளர்வெய்தியது தாய் புறம் போதலும், தாம் அவளைப்
பிரிந்திருத்தலுங் கருதியென்க. (10)
தன்றன்னை யுடையபெருந் தகைவேந்தர் பெருமான்முன்
சென்றன்ன மெனநின்று செப்புவாள் குறள்வீரற்
கன்றன்னக் குழியினொடு மாறழைத்த வருட்கடலே
இன்றன்னை கடலாட வேண்டினா ளென்றிரந்தாள். |
(இ
- ள்.) தன்னை உடைய பெருந்தகை வேந்தர் பெருமான் முன்
சென்று - தன்னைக் கிழத்தியாகவுடைய பெரிய தகுதியையுடைய மன்னர்
பெருமானாகிய சுந்தர பாண்டியர் திருமுன் சேர்ந்து, அன்னம் என நின்று
செப்புவாள் - அன்னம் போல நின்று கூறுவாள், குறள் வீரற்கு அன்று
அன்னக் குழியினொடு ஆறு அழைத்த அருட் கடலே - பூத வீரனுக்கு
அன்று அன்னக் குழியையும் வையையையும் அழைத்துத் தந்த
கருணைக்கடலே, இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று - இது
போது என் தாய் கடலிற் சென்று நீராட விரும்பினாள் என்று கூறி, இரந்தாள்
- குறையிரந்தாள் எ - று.
தன்றன்னை
என்பதில் இரண்டாவது தன் சாரியை. அன்று ஒரு பூத
வீரனுக்கு ஆற்றினையழைத்த நீ இன்று என் அன்னை நீராடுதற்குக்
கடலினை அழைத்துத் தருதல் தகவுடைத்தென்பார் 'ஆறழைத்த அருட்
கடலே' என்றார். (11)
தேவிதிரு மொழிகேட்டுத் தென்னவராய் நிலம்புரக்குங்
காவிதிகழ் மணிகண்டர் கடலொன்றோ வெழுகடலுங்
கூவிவர வழைத்துமென வுன்னினான் குணபாலோர்
வாவியிடை யெழுவேறு வண்ணமொடும் வருவனவால். |
(இ
- ள்.) தேவி திருமொழி கேட்டு - தேவியாரின் திருவார்த்தையைக்
கேட்டு, தென்னவராய் நிலம் புரக்கும் காவி திகழ் மணிகண்டர் - பாண்டி
மன்னராய் நிலவுலகைக் காக்கும் நீலமலர் போல விளங்கும் அழகிய
மிடற்றினையுடைய இறைவர், கடல் ஒன்றோ - ஒரு கடல் மாத்திரமோ,
எழுகடலும் கூவி வரவழைத்தும் என - ஏழு கடலையும் கூவி
வரவழைப்போம் என்று கூறி, உன்னினார் - அவை வருமாறு நினைத்தார்
(நினைத்தலும்), குணபால் - அம் மதுரைப் பதியின் கீழ்பாலுள்ள, ஓர் வாவி
இடை எழு வேறு வண்ணமொடும் வருவன - ஒரு வாவியிடத்தே
எழுவகைப்பட்ட நிறங்களோடும் அவை வாரா நின்றன எ - று.
|