பக்கம் எண் :

உக்கிரகுமாரபாண்டியரது திருவவதாரப் படலம்537



வெல்லுதற் கரியார் தம்மை வெல்லுத றேவராலுஞ்
செல்லுதற் கரிய தேத்துஞ் சென்றிடு திறையுங் கோடல்
புல்லுதற் கரிய ஞால மாலைபோற் புயத்தி லேந்திச்
சொல்லுதற் கரிய வீர* முலகெலாஞ் சுமப்ப வைத்தல்.

     (இ - ள்.) வெல்லுதற்கு அரியார் தம்மை வெல்லுதல் - யாவராலும்
வெல்ல வொண்ணாதவரை வெல்லுதலும், தேவராலும் செல்லுதற்கு அரிய
தேத்தும் சென்று - அமரர்களாலும் செல்லமுடியாத தேயங்களினுஞ் சென்று
(அத்தேயத்தாரை வென்று), இடுதிறையும் கோடல் - அவரால் அளக்கப்பட்ட
திறையையும் கைக் கொள்ளலும், புல்லுதற்கு அரிய ஞாலம் - (யாவராலும்
ஒரு சேர) அடைதற் கரிய உலகத்தினை, மாலைபோல் புயத்தில் ஏந்தி -
பூமாலையைப்போல் தோளிற் றாங்கி, சொல்லுதற்கு அரிய வீரம் உலகு
எலாம் சுமப்ப வைத்தல் - சொல்லுதற்கொண்ணாத (தனது) ஆணையை
உலகத்தாரனைவரும் சுமக்குமாறு வைத்தலும் எ - று.

     தேம் என்னும் இடப்பெயர் அத்துச் சாரியை பெற்று மகர வீறும்
சாரியை அகரமும் கெட்டுத் தேத்து என்றாயது, எளிதி னேந்தி யென்பார்
‘மாலைபோல் ஏந்தி’ என்றார். வீரம் என்றது ஈண்டு ஆணையை.
இவ்விருசெய்யுளிலும் எண்ணும்மைகள் விரிக்க. (44)

என்றிவை யாதி யாய வியற்குண முடைய னாகி
நன்றிசெய் துலகுக் கெல்லா நாயக னொருவ னாகி
நின்றிடு மிவற்குப் பின்னர் நீண்முடி கவித்து முன்னர்
மன்றல்செய் கென்று சூழ்ந்து மதிஞரோ டுசாவி னானே.

     (இ - ள்.) என்ற இவை ஆதியாய இயல் குணம் உடையனாகி .
என்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கைக் குணங்கள் உடையவனாகி,
உலகுக்கு எல்லாம் நன்றி செய்து - உலக முழுதிற்கும் நன்மை புரிந்து,
நாயகன் ஒருவனாகி நின்றிடும் - ஒரே தலைவனாகி நிற்பான்; இவற்கு -
(இங்ஙனமாய) இவனுக்கு, நீண்முடி பின்னர் கவித்தும் - பெரிய மகுடத்தினைப் பின்பு சூட்டுவோம்; முன்னர் மன்றல் செய்க என்று சூழ்ந்து - முதற்கண்
திருமணம் செய்யப்பெறுக என்று ஆலோசித்து, மதிஞரோடு உசாவினான் -
அமைச்சரோடும் ஆராய்ந்தார் எ - று.

     என்ற செய்க என்பவற்றின் அகரம் தொக்கது. என்று என்பதனை
எண்ணிடைச் சொல்லெனக் கொண்டு மேல் எண்ணிய எல்லாவற்றோடும்
கூட்டலுமாம். கவித்தும் : தன்மைப் பன்மை. செயப்படுக வென்பது
செய்கவென நின்றது; செய்கும் என்பது விகாரமாயிற் றெனலுமாம். மதிஞர் -
மதிநுட்பம் நூலோடுடைய அமைச்சர். (45)

ஆகச் செய்யுள் - 965.



     (பா - ம்.) * சொல்லுதற்கரிய கீர்த்தி.