பக்கம் எண் :

574திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) அரும்பரி மகம் தொண்ணூற்றாறு செய்துழி - செய்தற்கரிய
பரிவேள்வி தொண்ணூற்றாறு செய்த விடத்து, சுரும்பு அரி பெரும்படைத்
தோன்றல் - மலைகளின் சிறகினை அரிந்த பெரிய வச்சிரப்
படையினையுடைய இந்திரனானவன், தண் நறா விரும்பு அரி முரன்று சூழ் -
குளிர்ந்த தேனை விரும்பும் வண்டுகள் ஒலித்துச் சூழ்கின்ற, வேம்பின் அம்
குழை - வேம்பினது அழகிய தளிரை யணிந்த, பொரும் பரிவீரன் மேல் -
போர் செய்யும் குதிரைகளையுடைய வீரனாகிய உக்கிர வழுதியின் மேல்,
பொறாது - மனம் பொறாது, பொங்கினான் - வெகுண்டான் எ - று.

     தொண்ணூ றென்பது விகாரமாயிற்று. வேம்பின் றளிராற்
றொடுக்கப்பட்ட கண்ணி; "வேம்பினொண்டளிர்" எனப் புறப்பாட்டில் வருவது
காண்க. நூறு வேள்வி புரிந்திடின் தன் பதவிக் குரியனாவன் என்னுங்
கருத்தாற் பொறாதவனாயினான். (3)

மன்னிய நாடெலாம் வளஞ்சு ரந்துவான்
பொன்னிய னாடுபோற் பொலித லாலிந்த
மின்னிய வேலினான் வேள்வி செய்வதென்
றுன்னிய மனத்தனோர் சூழ்ச்சி யுன்னினான்.

     (இ - ள்.) மன்னிய நாடு எலாம் - நிலைபெற்ற தன் நாடு முழுதும்,
வான்வளம் சுரந்து - மழை வளம் மிகுந்து, இயல் பொன் நாடு போல்
பொலிதலால் - அழகிய பொன்னுலகம் போல விளங்குதலானன்றே, இந்த
மின்னிய வேலினான் - இந்த ஒளி பொருந்திய வேற் படையையுடைய
உக்கிரவழுதி, வேள்வி செய்வது என்று உன்னிய மனத்தன் - வேள்வி
செய்கின்றது என்று கருதிய மனத்தினாய், ஓர் சூழ்ச்சி உன்னினான் - ஒரு
வஞ்சனையை நினைத்தான் எ - று.

     செய்வது பொலிதலானன்றே என்றுன்னிய வென்க. செல்வம் மிக்கு
வானிலுள்ள பொன்னாடு போல் எனலுமாம். செய்வது : தொழிற்பெயர். (4)

பொருங்கடல் வேந்தனைக் கூவிப் பொள்ளென
இருங்கட லுடுத்தபா ரேமு மூழிநாள்
ஒருங்கடுவெள்ளமொத் துருத்துப் போய்வளைந்
தருங்கடி மதுரையை யழித்தியா லென்றான்.

     (இ - ள்.) பொரும் கடல் வேந்தனை - அலைகள் மோதும் கடலின்
மன்னனாகிய வருணனை, கூவி - அழைத்து, பொள்ளென - விரைந்து
இருங்கடல் உடுத்த பார் ஏழும் - பெரிய கடல் சூழ்ந்த ஏழு தீவுகளையும்,
ஊழிநாள் ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து - ஊழிக்காலத்தில் ஒரு சேர
அழிக்கும் வெள்ளத்தைப் போன்று, உருத்துப்போய் வளைந்து -
சினந்துபோய் வளைந்து, அருங்கடி மதுரையை அழித்தி என்றான் - அரிய
காவலையுடைய மதுரையை அழிப்பாயாக என்று கூறினான் எ - று.

     பொள்ளென அழித்தி யெனக்கூட்டுக. பொள்ளென : விரைவுக் குறிப்பு.