பக்கம் எண் :

இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்583



14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
மின்னவிர் மணிப்பூண் மார்பன்
     வேலையை வேலால் வென்று
பொன்னவிர் வாகை வேய்ந்த
     புகழுரை செய்தே நாக
நன்னக ராளி செம்பொ
     னகைமுடி சிதற வந்த
மன்னவன் வளைகொண் டோச்சி
     வென்றதும் வகுத்துச் சொல்வாம்.

     (இ - ள்.) மின் அவிர் மணிப் பூண் மார்பன் - மின்போல் விளங்கும்
மணிகள் பதித்த அணிகலன் விளங்கும் மார்பினையுடைண உக்கிர வழுதி,
வேலையை வேலால் வென்று - கடலை வேற்படையினால் வென்று, பொன்
அவிர் வாகை வேய்ந்த புகழ் உரைசெய்தேம் - பொன் போல விளங்கும்
வாகை மாலை சூடிய புகழாகிய திருவிளையாடலைக் கூறினேம்; நல் நாக
நகர் ஆளி - (இனி) நல்ல வானுலகை ஆளும் இந்திரனது, செம் பொன்
நாகை முடிசிதற - சிவந்த பொன்னாலாகிய ஒளியினையுடைய முடி சிதறுமாறு,
அந்த மன்னவன் - அவ்வுக்கிர பாண்டிய மன்னன், வளைகொண்டு
ஒச்சிவென்றதும் - திகிரி கொண்டு எறிந்து வெற்றிபெற்ற
திருவிளையாடலையும், வகுத்துச் சொல்வாம் - வகுத்து கூறுவாம் எ - று.

     வாகை வேய்ந்து புகழ்கொண்ட திருவிளையாட லென்க. ஆளி -
ஆள்பவன்; இ : வினைமுதற்பொருள் விகுதி. கொண்டு : மூன்றாம்
வேற்றுமைச் சொல்லுருபு; இரண்டன் பொருளில் வந்தது. (1)

கோமக னிகழு நாளிற் கோணிலை பிழைத்துக் கொண்மூ
மாமழை மறுப்பப் பைங்கூழ் வறந்துபுற் றலைக டீந்து
காமரு நாடு மூன்றுங் கையற வெய்த மன்னர்
தாமது தீர்வு நோக்கித் தமிழ்முனி யிருக்கை சார்ந்தார்.

     (இ - ள்.) கோமகன் நிகழும் நாளில் - (இங்ஙனம்) உக்கிர வழுதி
செங்கோல் ஒச்சுங் காலத்தில், கோள் நிலை பிழைத்து - ஒன்பது
கோட்களும் தத்தம் நிலைனின்றும் பிறழ்தலால், மாகொண்மூ மழை மறுக்க
- கரிய முகில்கள் மழை பெய்யாதொழிய, காமரு நாடு மூன்றும் - அழகிய
தமிழ் நாடு மூன்றும், பைங்கூழ் வறந்து - பயிர்கள் தீந்து, புல் தலைகள்
தீந்து - புல்லின் தலைகளுங் கருகி, கையறவு எய்த - வறுமை மிக, மன்னர்
- அந்நாட்டினை ஆளும் வேந்தர் மூவரும், அது தீர்வு நோக்கி -
அவ்வறுமை ஒழிதலைக் கருதி, தமிழ் முனி இருக்கை சார்ந்தார் - அகத்திய
முனிவரின் இருப்பிடமாகிய பொதியின்மலையை அடைந்தனர் எ - று.