பக்கம் எண் :

யானையெய்த படலம்61



     அழித்தல் - காரணத்தில் ஒடுக்குதல். படைத்தல் - காரணத்தினின்றும்
தோற்றுவித்தல். "ஒடுங்கின சங்காரத்தின் வழியல்லது உற்பத்தியில்லை"
ஆகலின், ‘அழித்து மீளவுண்டாக்கு முருத்திரன்’ என்றார். திருமால் முதலிய
தேவர்களெல்லாம் தத்தம் தொழில் நடத்துவது இறைவன் சத்திகளிற்
சிலவற்றைப் பெற்றே யென்பார் ’உருத்திரன் வீரசத்தியினிற் சில தரித்து’
என்றார். தரித்து இடந்த வென்க. இறவா அவுணன் - இறவாதிருக்க வரங்கள்
பெற்ற அவுணன்; இதனை,

"பெண்ணிற் பேரெழி லாணினி லலியினிற் பிறிதும்
உண்ணிற் கும்முயி ருள்ளதி னில்லதி னுலவான்
கண்ணிற் காண்பன கருதுவ யாவினுங் கழியான்
மண்ணிற் சாகிலன் வானினுஞ் சாகிலன் வரத்தால்"

என்பது முதலிய கம்பர் செய்யுட்களால் அறிக. நரசிங்கக் கணைக்கு
நரசிங்கப் பெருமானை உவமை கூறிய ஆசிரியர் அம்மூர்த்தியினிடத்துள்ள
அன்பினால் அவனை வழிபட்டார் பெற்ற பேற்றையும் கூறினார்.

                     (42) ஆகச் செய்யுள் - 1427.