பக்கம் எண் :

மேருவைச் செண்டாலடித்த படலம்613



     (இ - ள்.) மல்கு மாறு இல் - நலம் பெருகுந் தன்மை இல்லையாக,
கோள் திரிந்து - கோட்கள் தத்தம் நிலையினின்றும் மாறுதலால், மழை
சுருங்கி நதியும் நீர் ஒல்குமாறு - மழைவளஞ் சுருங்கி நதியும்நீர் வறப்ப,
பருவம் மாறி உணவுமாறி - பருவங்கள் மாறுபட்டு உணவு இன்றாகி,
உயிர்எலாம் மெல்குமாறு - உயிர்களனைத்தும் மெலியுமாறு, பசி உழந்து -
பசியால் வருந்தி, வேந்தனுக்கு விளை பொருள் நல்குமாறு இலாமை
அரசனுக்கு விளைபொருள் கொடுத்தலும் இல்லையாக, நாடு எலாம் இன்னல்
நலிய வந்த - நாடு முழுதும் வறுமைத் துன்பம் வருத்துமாறாயின எ - று.

     இல் - இல்லையாக. ஒல்குமா றென்பதனை ஒல்க வெனத் திரிக்க.
பருவம் மாறுதலாவது கார் கூதிர்ப் பருவங்களில் மழையின்மையின் எல்லாப்
பருவங்களும் தம் இயல்பு மாறுதல். திரிதலால் சுருங்கி ஒல்க அதனால்
பருவமாறி உணவுமாறி உழந்து இல்லையாக நாடெலாம் நலிய வந்தன எனக்
கூட்டி வினைமுடிவு செய்க. இன்னல்கள் வந்தன என்னலுமாம். (5)

மழைவ றந்த தென்கொ லென்று வழுதிகூற முழுதுணர்ந்
தழிவி லாத பிரம கற்ப மளவு மெல்லை கண்டநூல்
உழவர் கோள்க ளிரவி தன்னை யுற்று நோக்கி நிற்றலால்
தழையு மாரி வருடி யாதொர் வருட மென்று சாற்றினார்.

     (இ - ள்.) மழை வறந்தது என்கொல் என்று வழுதிகூற - மழை
வறந்ததற்குக் காரணம் யாதென்று பாண்டியன் வினவ (அதற்கு), முழுது
உணர்ந்து அழவு இலாத பிரமகற்பம் அளவும் இல்லை கண்ட நூல் உழவர்
- சோதிட நூல் முழுதும் உணர்ந்து அழியாத பிரம கற்பம் வரையும்
காலவளவைத் தேர்ந்துணர்ந்த புலவர்கள், கோள்கள் இரவி தன்னை உற்று
நோக்கி நிற்றலால் - ஏனைய கோட்கள் சூரியனைப் பொருந்தி நோக்கி
நிற்றலால், ஓர் வருடம் தழையும் மாரி வருடியாது என்று சாற்றினார்.
ஓராண்டுவரை (உலகைச்) செழிப்பிக்கும் மழையானது பொழியாது என்று
கூறினார்கள் எ - று.

     பிரம கற்பம் - பிரமனுக்கு ஒருபகல்; பதினான்கு இந்திரர்
அழியுங்காலம். அக்காலம் என்றும் வந்து கொண்டிருத்தலின் ‘அழிவிலாத’
என்றார்; உபசாரமுமாம். நூலுழவர் - புலவர்; ‘சொல்லே ருழவர்’ என்பது
போலும் வழக்கு. எல்லை கண்ட நூல் எனலுமாம். வருடியாது :
வடசொற்றிரிபு. (6)

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
மகவுறு நோயை நோக்கி வருந்துறு தாய்போன் மன்னன்
பகவுறு மதியஞ் சூடும் பரஞ்சுடர் முன்போய்த் தாழ்ந்து
மிகவுறு பசியால் வைய மெலிவதை யைய வென்னாத்
தகவுற விரங்கிக் கண்ணீர் ததும்பி* நின் றிரந்து வேண்ட.

     (இ - ள்.) மகவு உறு நோயை நோக்கி வருந்துறு தாய்போல் -
பிள்ளையுற்றபிணியைநோக்கி வருந்துகின்ற தாயைப்போல, மன்னன் -


     (பா - ம்.) * ததும்ப.