பக்கம் எண் :

62திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இருபத்து மூன்றாவது விருத்தகுமார பாலரான படலம்

[கலிநிலைத்துறை]
தழையு லாங்கைய ரேவிய தந்திமேல் விடைமேல்
அழகர் சேவகஞ் செய்தவா றறைந்தன மவரே
கிழவ னாகிப்பின் காளையாய்க் கிஞ்சுகச் செவ்வாய்க்
குழவி யாய்விளை யாடிய கொள்கையைப் பகர்வாம்.

     (இ - ள்.) தழை உலாம் கையர் ஏவிய தந்திமேல் - மயிற்றோகை
பொருந்திய கையையுடைய சமணர்கள் ஏவிய யானையின்மேல், விடை மேல்
அழகர் சேவகம் செய்தவாறு அறைந்தனம் - இடப வூர்தியில் ஏறியருளும்
பேரழகராகிய சோமசுந்தரக் கடவுள் சேவகஞ்செய்த திருவிளையாடலைக்
கூறினோம்; அவரே - (இனி) அவ்விறைவரே, கிழவனாகி பின் காளையாய்
சிஞ்சுகம் செவ்வாய்க் குழவியாய் - முதலில் விருத்தனாகியும் பின்பு
குமாரனாகியும் அதன்பின் முருக்கிதழ் போன்ற சிவந்த வாயினையுடைய
பாலனாகியும், விளையாடிய கொள்கையைப் பகர்வாம் - விளையாடியருளிய
திருவிளையாடலைக் கூறுவாம்.

     தழை - மயிற்பீலி. உலாவும் என்பது உலாம் என்றாயது. கையர்
என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, வஞ்சகர் என்றும்
உரைத்தலமையும். முறையே குழவியாய்க் காளையாய்க் கிழவனாகும்
உலகியற்கு மாறாக விளையாடின ரென்க. (1)

தென்னன் விக்கிர மன்புயத் திருநிலச் செல்வி
மன்னி வாழுநாண் மதுரையின் மறையவ னொருவன்
அன்ன வன் விரூ பாக்கனா மவன்குடி வாழ்க்கை
மின்ன னாள்வட மீனனாள் பெயர்சுவ விரதை.

     (இ - ள்.) தென்னன் விக்கிரமன் புயத்து இருநிலச் செல்வி மன்னி
வாழு நாள் - பாண்டியனாகிய விக்கிரமன் தோளின்கண் பெரிய நில
மகளானவள் நிலை பெற்று வாழ்கின்ற நாளில், மதுரையில் மறையவன்
ஒருவன் - அம் மதுரைப் பதியில் அந்தணன் ஒருவன் இருந்தனன்;
அன்னவன் விரூபாக்கன் ஆம் - அவன் விரூபாக்கன் என்னும்
பெயருடையனாவான்; அவன் குடி வாழ்க்கை மின் அனாள் - அவன்
இல்வாழ்க்கைக்குரிய மனையாள், வடமீன் அனாள் - அருந்ததி போலும்
கற்பினை யுடையவள்; பெயர் சுபவிரதை - அவள் பெயர் சுபவிரதை
யென்பதாம்.

     ஏற்ற பெற்றி சொற்கள் விரித்துரைக்கப் பட்டன. விரூபாக்கன் - மேல்
நோக்கிய விழியையுடையவன்; இது சிவபிரான் திருப்பெயர்களுள் ஒன்று.