பக்கம் எண் :

மேருவைச் செண்டாலடித்த படலம்625



இன்றுகேட் டிலையோ வைய* வேந்திழை யொருத்தி காமந்
துன்றுமா கடலின் மோகச் சுழித்தலைப் பட்டு வெள்ளி
மன்றுளா டிய பொற் பாதம் வழிபடன் மறந்து தாழ்த்து+
நின்றுளே னினைய தீங்கி னிமித்தினா லடியும் பட்டேன்.

     (இ - ள்.) யை இன்று கேட்டிலையோ - ஐயனே இன்று நடந்த
தொரு செய்தியைக் கேட்பாயாக, ஏந்திழை ஒருத்தி காமம் துன்று மாகடலில்
- பெண் ஒருத்தியின் காமமாகிய பெரிய கடலிலுள்ள மோகச்
சுழித்தலைப்பட்டு - மோகமாகிய சுழியில் ஆழ்ந்து, வெள்ளி மன்றுள் ஆடிய
பொன்பாதம் வழிபடல் மறந்து - வெள்ளியம்பலத்தில் ஆடியருளும் பொன்
போலும் திருவடிகளை வணங்குதலை மறந்து, தாழ்த்து நின்றுளேன் -
தாமதித்து நின்றேன், இனைய தீங்கின் நிமித்தினால அடியும் பட்டேன் -
இந்தகு காரணத்தால் அடியும்பட்டேன் எ - று.

     கேட்டிலையோ என்றது கேட்பாயாக வென்னும் குறிப்பிற்று. ஏந்திழை
யென்பது அன்மொழித்தொகைப் பெயராய்ப் பின் ஒருத்தி யென்பதனோடுந்
தொக்கது; ஏந்திய அணிகளையுடைய ஒரு பெண் எனலுமாம். சுழித்தலை,
தலை : ஏழனுருபு; பட்டு - அகப்பட்டு, ஆழ்ந்து. நிமித்தத்தினால் என்பது
நிமித்தினால் என விகாரமாயிற்று. தீங்கின் நிமித்தம் - தீங்காகிய நிமித்தம்.
(30)

திருவடி பிழைத்த தீங்கு தீர்த்தனை யிதனி லையன்
தருவதோ ருறுதி தானுந் தக்கதோர் கைம்மா றென்னால்
வருவது முண்டாங் கொல்லோ மற்றது நிற்க மன்றற்
பருவரை மார்ப வந்த பரிசென்கொல் பகர்தி யென்ன.

     (இ - ள்.) திருவடி பிழைத்த தீங்கு தீர்த்தனை - சிவபெருமான்
திருவடிக்குத் தவறுசெய்த தீமையை நீக்கினை, இதனில் ஐயன் தருவது ஓர்
உறுதி தானும் - இதனிலும் ஐயனே நீ செய்வதொரு நன்மையும், தக்கது ஓர்
கைம்மாறு என்னால் வருவது - (அதற்குத்) தகுதியாகிய ஒரு கைம்மாறு
என்னாற் கிடைப்பதும், உண்டாம் கொல் - உண்டாமோ (இல்லை), அது
நிற்க - அஃதிருக்க, மன்றல் பருவரை மார்ப - மாலையை யணிந்த பருத்த
மலை போலும் மார்பினையுடையவனே, வந்த பரிசு என் பகர்தி என்ன - நீ
வந்த காரணம் யாது கூறுவாயாக என்ன எ - று

.      எல்லாப் பிழையினும் திருவடிக்குச் செய்யும் பிழை பெரிதென்பது,

"அடியேன் பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்"

என நம்பியாரூரர் கூறுதலா னறிக. தீர்த்தனை - ஒறுத்தலால் தீர்த்தாய்;
தீர்க்க வொண்ணாத தோர் தீங்கினைத் தீர்த்தருளினை ஆதலின் இதனினும்
தருவதோர் உறுதியுண்டோ என்றவாறு. கைம்மாறு - எதிர்நன்றி. மன்றல் -
மணம்; மாலைக்காயிற்று. பரிசு - விதம்; காரணத்தை யுணர்த்திற்று. தான்,
கொல், மற்று என்பன அசைகள். (31)


     (பா - ம்.) * ஐயா. +தாழ்ந்து.