பக்கம் எண் :

விருத்தகுமார பாலரான படலம்63



மின்னனாள் - மின்னலை யொத்தவள்; கிழத்தி என்னுந் துணையாய்
நின்றது. சுபவிரதை - நல்ல விரத முடையாள் என்னும் பொருள்
பயப்பது. (2)

அனையர் தங்களுக் கரும்பெறன் மகவின்றி யனந்தம்
புனித நல்லறஞ் செய்தொழி லொழுக்கமும் பூண்டு
நனைய வார்குழ லன்னை ரெழுவர்பா னண்ணி
இனிய மாதவஞ் செய்தொரு பெண்மக வீன்றார்.

     (இ - ள்.) அனையர் - அவ்விருவரும், தங்களுக்குப் பெறல் அரும்
மகவு இன்றி - தமக்குப் பெறுதற்கரிய மகப்பேறு இன்மையால், அனந்தம்
புனித நல் அறம் செய்தொழில் - அளவிறந்த தூய சிவ புண்ணியஞ்
செய்தலாகிய தொழிலையும், ஒழுக்கமும் - சீலத்தையும், பூண்டு மேற்கொண்டு,
நனைய வார்குழல் அன்னையர் எழுவர் பால் நண்ணி - தேனினையுடைய
நீண்ட கூந்தலையுடைய அன்னையராகிய சத்தமாதர் திருமுன் பெய்தி, இனிய
மாதவஞ்செய்து - இனிய பெரிய தவத்தைச் செய்து, ஒரு பெண்மகவு ஈன்றார்
- ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.

     பெறலரும் என்பது மாறி நின்றது. நெடுநாள் மகவில்லையாக அதன்
பின் என்க. தொழிலும் என உம்மை விரிக்க. ஒழுக்கம் - கடவுள் வழிபாடு
முதலியன. நனைய : குறிப்புப் பெயரெச்சம். சத்த மாதர்கள் - பிரமாணி,
நாராயணி, மாயேசுரி, கௌமாரி, வராகி, உருத்திராணி, இந்திராணி
என்போர்; பிறவாறுங் கூறுவர். (3)

பேருங் கௌரியென் றழைத்தனர் பிராயமோ ரைந்திற்
சாருங் கௌரியும் பிறவிநோய் தணிப்பதற் குறுதி
தேருஞ் சிந்தையா டந்தையை வணங்கியிச் செனனம்
ஈருந் தெய்வத மந்திர மியாதென வினவ.

     (இ - ள்.) பேரும் கௌரி என்று அழைத்தனர் - பெயரும் கௌரி
யென்றிட்டு அழைத்தனர்; பிராயம் ஓத் ஐந்தில் சாரும் கௌரியும் - ஐந்து
வயதையடைந்த கௌரியம்மையும், பிறவி நோய் தணிப்பதற்கு உறுதி தேறும்
சிந்தையாள் - பிறவிப் பிணியைப் போக்குதற்குச் சிறந்த வழியை ஆராயுஞ்
சிந்தையை யுடையளாய், தந்தையை வணங்கி - தன் தந்தையாகிய
விரூபாக்கனை வணங்கி, இச்செனனம் ஈரும் தெய்வத மந்திரம் யாது என
வினவ - இப்பிறவியை ஒழிக்கும் தெய்வத்தன்மை பொருந்திய மந்திரம் யாது
என்று வினவ.

     ஐந்திற் சாறும் - ஐந்தினைப் பொருந்திய, உறுதி - மேலான. சாதனம்
யாவென என்று பாடங்கொண்டு, தெய்வமும் மந்திரமும் யாவை யென
வினவ, என்றுரைப்பாரு முளர். (4)

அந்த ணாளனு மதிசயித் தரும்பெறன் மகட்குச்
சிந்தை யார்வமோ டிறைவிதன் மனுவினைச் செப்பத்
தந்தை பாலது தெளிந்துநாத் தழும்புறப் பயின்றாள்
முந்தை நாளருந் தவக்குறை முடித்திட வந்தாள்.